இல.கணேசன் மறைவு: குடியரசுத் தலைவர், பிரதமர் இரங்கல்!

Advertisements

நாகலாந்து ஆளுநர் இல.கணேசன் மறைவுக்குக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு விடுத்துள்ள இரங்கல் செய்தியில், இல.கணேசனின் நீண்ட பொதுவாழ்வில் மக்களின் நல்வாழ்வுக்காகப் பணியாற்றியுள்ளதாகவும், தமிழ்நாடு, இந்தியா ஆகியவற்றின் மேம்பாட்டுக்கு அவரின் பங்களிப்பை நினைவுகூர்ந்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி விடுத்துள்ள இரங்கல் செய்தியில், தேச சேவைக்கும், தேசத்தைச் சிறப்பாகக் கட்டமைக்கவும் தமது வாழ்க்கையை அர்ப்பணித்த ஒரு உண்மையான தேசியவாதியாக இல.கணேசன் எப்போதும் நினைவுகூரப்படுவார் என்று குறிப்பிட்டுள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விடுத்துள்ள இரங்கல் செய்தியில், நெருக்கடி நிலைக் காலத்தில் நாட்டுக்கு மதிப்பு மிக்க பங்களித்தவர் இல.கணேசன் என்று குறிப்பிட்டுள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது இரங்கல் செய்தியில், அனைவரிடமும் அன்போடும், பாசத்தோடும் பழகக்கூடிய இல. கணேசன் பல்வேறு பதவிகளில் பணியாற்றிய பெருமைக்குரியவர் எனக் குறிப்பிட்டுள்ளார்.

அண்ணாமலை விடுத்துள்ள இரங்கல் செய்தியில், தமிழகத்தில், பாஜக வளர்ச்சிக்காகவும், தமிழக நலனுக்காகவும் கடுமையாக உழைத்தவர் இல.கணேசன் என்று குறிப்பிட்டுள்ளார். அனைத்துப் பிரிவு மக்களிடமும் பரவலாக அறியப்பட்டவர், எளிமையான மனிதர், ஆழ்ந்த சிந்தனைவாதியாகத் திகழ்ந்தவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பாமக தலைவர்அன்புமணி விடுத்துள்ள இரங்கல் செய்தியில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளிடமும்  நட்புறவைப் பேணியவர் இல.கணேசன் என்று குறிப்பிட்டுள்ளார். மருத்துவர் இராமதாஸ் மீது மதிப்பும், தன் மீது  மிகுந்த அன்பும் கொண்டவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *