கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘டோரதி’ திரைப்படம் குறித்து திருநங்கை அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது சிநேகிதி அமைப்பை சேர்ந்த சில்க் ஸ்மிதா பேசும்போது, “சினிமாவில் திருநங்கைகள் எதிர்மறை கதாபாத்திரங்களில் தான் சித்தரிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால், கார்த்திக் சுப்பராஜ் எங்களின் வலியை திரையில் வெளிக்கொண்டுவந்துள்ளார். அவருக்கு நாங்கள் தலை வணங்குகிறோம். எதார்த்தமான விஷயங்களை மக்களுக்கு கொண்டு சேர்ப்பது மிகவும் முக்கியம். இந்த திரைப்படத்தை எடுத்ததற்கு நன்றி.” என்றார்.
சென்னை சகோதரன் அமைப்பைச் சேர்ந்த சுதா கூறுகையில், “இந்த திரைப்படத்தை புரிந்து கொண்டவர்கள் 90% பேர். எவ்வளவு பேர் திருநங்கைகள் பற்றிய புரிதலுடன் இருக்கிறார்கள் என்பதை இந்தப் படம் அழகாக உணர்த்துகிறது.
90களில் நடந்த கதையாக நுணுக்கமாக இப்படத்தில் பல விஷயங்களை சொல்லி இருக்கிறார்கள்.ஏன் எங்களுக்கு ஒரு காதல் வரக் கூடாதா? எங்களுக்கு ஆண் துணை கிடைப்பது குறித்து பலரும் பேசுகிறார்கள். எல்லா உயிரினங்களுக்கும் துணை தேவை. யாராக இருந்தாலும், அன்பால் இணைகிறார்கள். இதில் விமர்சிப்பதற்கு எதுவும் இல்லை. நாங்கள் ஆயிரமாயிரம் கூட்டங்களை நடத்தி சொல்வதை விட ஒரு படம் அதிக விழிப்புணர்வை ஏற்படுத்தி விடுகிறது.
இளையராஜா எழுதிய பாட்டு எங்களுக்கு பெருமையாக உள்ளது. அவர் பாட்டு கேட்டு உறங்கினோம், காதலித்தோம், பயணித்தோம் இப்போது எங்களுக்காக பாடி உள்ளார். இந்தியாவிலேயே திருநங்கைகள் வாழ கூடிய தகுதியுள்ள மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. அரசுகள் எதுவும் செய்யவில்லை என்று சொல்ல முடியாது. மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனியான கழிப்பறை தேவை உள்ளது. பெண்களாக இருக்க கூடிய திருநங்கைகளுக்கு பெண்கள் கழிப்பறை பயன்படுத்த முடியும்.
ஆண் உடையில் இருக்கும் திருநங்கைகளுக்கு ஆண் அல்லது பெண் கழிவறை செல்வதில் சிக்கல் உள்ளது. குடும்பங்கள் எங்களை போன்றவருக்கு உடன் நின்றால் பல பிரச்சினைகள் இருக்காது. மூன்றாம் பாலினத்தவர்கள் திருமணம் செய்து கொள்ளலாம் என்று சட்டமே உள்ளது. பாலின சமத்துவம் பற்றிய புரிதல் இருந்தால் இந்த பிரச்சினை இருக்காது. சுருளி ராஜன் ஒரு படத்தில் எங்களை போன்று பேசுவதாக மிமிக்கிரி செய்தார், முரட்டு காளை படத்தில் விவேக் கூட இப்படி நடித்தார் அது எங்களுக்கு வருத்தம்.
இப்போது எங்கள் அமைப்பு சற்று வலுவடைந்துள்ளது அதனால் குரல் கொடுக்கிறோம். இந்த படம் எங்கள் வாழ்வை மாற்றி உள்ளது. இந்த படத்தின் தாக்கத்தால் கிராமப்புறத்தில் எங்களை ஏற்று கொள்ள வாய்ப்பு இருக்கும். இந்த படத்தை பார்த்துவிட்டு கார்த்திக் சுப்புராஜ் அவர்களை எங்கள் தம்பியாக ஏற்று கொள்கிறோம்” என்றார்.

