
சென்னை:
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்ட வியாசர்பாடி ரவுடி நாகேந்திரன் தொடர்புடைய 8 இடங்களில் இன்று போலீசார் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
புளியந்தோப்பு துணை ஆணையர் தலைமையில் 2 உதவி ஆணையர்கள், ஆய்வாளர்கள் உள்ளிட்ட போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர். அண்மையில், வடசென்னை ரௌடி நாகேந்திரனின் தம்பி ரமேஷ் என்பவர் வீட்டைச் சோதனை செய்தபோது அவரது வீட்டிலிருந்து 51 அரிவாளர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
நாகேந்திரனின் பூர்வீக வீட்டில் அவரது தம்பி ரமேஷ் என்பவர் வசித்து வரும் நிலையில், அங்குதான் 51 அரிவாள்கள் கைப்பற்றப்பட்டன. மேலும், நாகேந்திரனின் உறவினர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், இன்று மீண்டும், ரவுடி நாகேந்திரன் தொடர்புடைய 8 இடங்களில் இன்று போலீசார் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
ரவுடி நாகேந்திரனுக்கும் வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த பெண் தாதா இலா மல்லி என்பவருக்கும் மோதல் இருந்து வந்தது. கடந்த 2020 ஆம் ஆண்டு இலா மல்லியின் மகனும் ரவுடியுமான விஜய்தாஸ் என்பவரை நாகேந்திரன் தரப்பினர் கொலை செய்தனர்.
அதற்குப் பழிவாங்க இலா மல்லி நேரம் பார்த்துக் காத்திருந்த நிலையில் உடல்நலக்குறைவால் 2 ஆண்டுகளுக்கு முன்பு அவர் மரணம் அடைந்தார்.
இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிக்கிய நாகேந்திரன் தரப்பினர் தற்போது ரவுடி தொழிலில் டவுன் ஆகியிருப்பது போன்ற தோற்றம் நிலவும் நிலையில், நாகேந்திரனின் எதிர்தரப்பு ரவுடிகள் ஒன்று சேர்ந்து நாகேந்திரனின் குடும்பத்தில் யாரையாவது கொலை செய்யத் திட்டம் போட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இலா மல்லியின் மற்றொரு மகன் மோகன்தாஸ் மற்றும் நாகேந்திரனின் தம்பி முருகன் ஆகியோரிடையே மோதல் ஏற்பட வாய்ப்புள்ளதாக உளவுத்துறை போலீசார் எச்சரித்துள்ளனர்.
