
லியோ பட இயக்குனர் மற்றும் படக்குழு மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கக்கோரி ஒருவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
நடிகர் விஜய்யை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கிய லியோ திரைப்படம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திரைக்கு வந்தது. சுமார் 300 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.600 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்து சாதனை படைத்தது. இதையடுத்து ஓடிடியில் வெளியானபோதும் லியோ படத்துக்கு அமோக வரவேற்பு கிடைத்தது. இந்த நிலையில், லியோ பட இயக்குனர் மற்றும் படக்குழு மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கக்கோரி ஒருவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ராஜாமுருகன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான லியோ திரைப்படத்தில் கலவரம், சட்டவிரோத செயல்கள், கார் மற்றும் இருசக்கர வாகனங்களை அதிவேகமாக இயக்குவது, காவல்துறை உதவியுடன் எல்லா குற்றங்களையும் செய்ய முடியும் என்பன போன்ற காட்சிகள் இடம்பெற்று உள்ளன.
இந்தக் காட்சிகள்மூலம் சமூகத்திற்கு தவறான வழிகாட்டுதல்களை லோகேஷ் கனகராஜ் காட்டி இருப்பதாகவும், இது போன்ற திரைப்படங்களைத் தணிக்கை அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்ய வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளதோடு, இயக்குனர் லோகேஷ் கனகராஜை முறையாக உளவியல் பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் வன்முறையைத் தூண்டும் வகையில் காட்சிகளைப் படமாக்கியதற்காக இந்திய தண்டனைச் சட்டத்தின் படி பல்வேறு பிரிவுகளின் கீழ் இப்படக்குழு மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என அந்த மனுவில் ராஜாமுருகன் குறிப்பிட்டு உள்ளார்.
மேலும் லியோ படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் அவர் குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில், இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின்போது மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் ஆஜராகாத காரணத்தால் இந்த வழக்கின் விசாரணையை ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்து உள்ளனர்.

