
சென்னை தியாகராய நகரில் நடைபெற்ற பிரதமர் மோடியின் சாதனை விளக்கக் கண்காட்சியைத் தொடங்கி வைத்த பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழக அரசு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
சென்னை கமலாலயத்தில் நடைபெற்ற பிரதமர் மோடியின் 12 ஆண்டுகால சாதனை விளக்கக் கண்காட்சியை, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தொடங்கி வைத்தார். விழாவிற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசின் சாதனைகளை விளக்கிக் கூறியதோடு, மாநில அரசின் செயல்பாடுகள் குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) ஆட்சியை விமர்சித்த நயினார் நாகேந்திரன், “கடந்த கால திமுக ஆட்சிக்கும், தற்போதைய தவெக ஆட்சிக்கும் எந்தவிதமான வேறுபாடும் இல்லை. பெயர் மட்டுமே மாறியுள்ளது, செயல்பாட்டில் பழைய நிலையே தொடர்கிறது” என்று குற்றம் சாட்டினார்.
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகத் தெரிவித்த அவர், “இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு, மாநிலம் முழுவதும் சுமார் 30 கற்பழிப்பு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. எங்கு பார்த்தாலும் படுகொலைகள், தடையின்றித் தொடரும் கஞ்சா விற்பனை என மக்கள் அச்சத்தில் வாழும் சூழல் நிலவுகிறது. இது மிகுந்த கவலை அளிக்கும் அரசாக உள்ளது” என்று கடுமையாக விமர்சித்தார்.
மேலும், “எந்தவொரு புதிய ஆட்சிக்கும் 3 முதல் 6 மாதங்கள் அவகாசம் அளிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், ஆட்சியாளர்கள் குறைகளைக் கேட்டுத் திருத்திக்கொள்ள வேண்டும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதன்போது செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த அவர், “வந்தே மாதரம் சொல்வதில் எந்தத் தவறும் இல்லை. நாம் எப்படி தமிழ்த்தாய் வாழ்த்தைப் போற்றுகிறோமோ, அதேபோல்தான் வந்தே மாதரத்தையும் சொல்கிறோம்” என்று தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தினார்.



