
டெல்லியில் நடைபெற்ற பா.ஜ.க. ஆட்சி நிறைவு விழாவில், தமிழக அரசியல் களம் மற்றும் த.வெ.க.வின் வெற்றி குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முக்கிய கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு, ஆட்சிக்கட்டிலில் ஏறி 12 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, 3-வது ஆட்சிக்காலத்தின் 2 ஆண்டுகள் நிறைவு பெற்றதைக் கொண்டாடும் வகையில், டெல்லியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் சிறப்புக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த விழாவைத் தொடர்ந்து டெல்லி பாரத் மண்டபத்தில் செய்தியாளர்களுடனான கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் பா.ஜ.க. தேசிய தலைவர் நிதின் நபின், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய அமைச்சர்கள் நிதின் கட்காரி, ஜே.பி. நட்டா, அஸ்வினி வைஷ்ணவ், பியூஷ் கோயல் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வின் தொடக்கத்தில், பா.ஜ.க.வின் 12 ஆண்டுகால சாதனைகளை விளக்கும் படக்காட்சிகள் திரையிடப்பட்டன. தொடர்ந்து, கட்சியின் தேசிய தலைவர் நிதின் நபின் கடந்த கால ஆட்சிச் சாதனைகள் குறித்து உரையாற்றினார்.
இந்தக் கலந்துரையாடலின் போது பல்வேறு மாநிலங்களின் அரசியல் நிலவரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. குறிப்பாக, மேற்கு வங்காள தேர்தல் வெற்றி மற்றும் தமிழக அரசியல் சூழல் குறித்துப் பேசப்பட்டது. அப்போது பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் இவ்வளவு பெரிய வெற்றி பெறும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை” என்று தனது கருத்தைப் பதிவு செய்தார்.
தமிழகத்தில் பா.ஜ.க. சந்தித்த தேர்தல் தோல்வி குறித்த காரணங்களை ஆராய்வதற்காக, அடுத்த மாதம் அக்கட்சியின் தேசிய தலைவர் நிதின் நபின் தமிழகம் வரவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வருகை தமிழக பா.ஜ.க.வில் புதிய மாற்றங்களை அல்லது ஆலோசனைகளைத் தூண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




