
பயங்கரவாதம் ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கும் ஒரு கடுமையான சவாலாக உள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி ஐக்கிய அரபு அமீரகம், நெதர்லாந்து ஆகிய நாடுகளில் சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு சுவீடனுக்குச் சென்றார். ஸ்வீடன் நாட்டின் கோதன்பர்க்கில் நடைபெற்ற தலைமைச் செயல் அதிகாரிகளின் வட்டமேசை மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது, இன்றைய பதற்றமான உலகளாவிய சூழலில், இந்தியா மற்றும் ஸ்வீடன் போன்ற ஜனநாயக நாடுகளுக்கு இடையிலான நெருங்கிய ஒத்துழைப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்று கூறினார். பயங்கரவாதம் ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கும் ஒரு கடுமையான சவாலாக உள்ளது என்றார்.
தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, கடந்த ஆண்டு பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து ஸ்வீடனிடமிருந்து தங்களுக்கு கிடைத்த ஆதரவிற்காக பிரதமர் கிறிஸ்டர்சனுக்கு தனது நன்றியைத் தெரிவித்தார். ஸ்வீடன் நிறுவனங்கள் இந்தியாவில் உற்பத்தி வசதிகளை நிறுவுவது, ஒரு நீண்டகால தொழில்துறை கூட்டாண்மையை நோக்கி நாம் நகர்கிறோம் என்பதற்கான சான்றாக விளங்குகிறது என்று குறிப்பிட்டார்.
தொடர்ந்து, இந்நிகழ்வில் கலந்துகொண்ட ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயனுக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார்.
இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடிக்கு ஸ்வீடனின் மதிப்புமிக்க “ராயல் ஆர்டர் ஆஃப் போலார் ஸ்டார் கமாண்டர் கிராண்ட் கிராஸ்” விருது வழங்கப்பட்டது. இது, வெளிநாட்டுத் தலைவர் ஒருவருக்கு ஸ்வீடன் சார்பில் வழங்குப்படும் மிக உயர்ந்த கௌரவமாகக் கருதப்படுகிறது.


