
புதுச்சேரியில் 2700 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணி முடிக்கப்பட்ட திட்டங்களைத் தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியுள்ளார். புதுச்சேரி மருத்துவச் சுற்றுலா மையமாக விளங்கும் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் ஆளுநர் கைலாசநாதன், முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். அப்போது அவருக்கு ஆளுநர் நினைவுப் பரிசாக ஓவியத்தை வழங்கினார்.
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி பிரதமர் நரேந்திர மோடிக்குப் பட்டாடை போர்த்தியதுடன், வெள்ளியால் ஆன முருகன் சிலையையும், வெள்ளிவேலையும் பரிசளித்தார். அதன்பின் தஞ்சாவூர் ஓவியத்தையும் பிரதமருக்குப் பரிசளித்தார்.
2700 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணி முடிக்கப்பட்ட திட்டங்களைத் தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி, புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டியுள்ளார்.
விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, வணிகம், கல்வி, ஆன்மீகம், சுற்றுலா ஆகியவற்றில் புதுச்சேரி வளர்ச்சிக்குத் தான் உறுதியளித்ததாகவும், இதனால் அவற்றில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
புதுச்சேரியில் சாலைகள், குடிநீர் வழங்கல், கடலோர உட்கட்டமைப்பு, பள்ளிகள், மருத்துவமனைகள் ஆகிய திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்கியுள்ளதைச் சுட்டிக்காட்டினார்.
புதுச்சேரி ஒரு மருத்துவச் சுற்றுலா மையமாக விளங்கும் என்றும், இங்கு ஏற்கெனவே ஒன்பது மருத்துவக் கல்லூரிகள் உள்ளதாகவும் தெரிவித்தார். ஜிப்மர் மருத்துவமனையில் உள்ள மண்டலப் புற்றுநோய் மையத்தை நவீனமயமாக்குவது நலவாழ்வு வசதிகளை மேலும் விதிவாக்கும் என்று குறிப்பிட்டார்.



