திருக்குறள் உலகளவில் ஆழ்ந்த உத்வேகத்தின் ஊற்று – பிரதமர் மோடி!

Advertisements

உஸ்பெகிஸ்தானில் உள்ள தாஷ்கண்ட் மாநிலப் பல்கலைக்கழகத்தின் கீழையியல் துறையை பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட்டார். அங்கு பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார்.

அப்போது பேசிய பிரதமர் மோடி, ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழில் எழுதப்பட்ட திருக்குறள், ஆன்மிகம், தத்துவம் மற்றும் நடைமுறை அறிவை உள்ளடக்கியதாகவும், இன்றும் அனைத்து தரப்பு மக்களுக்கும் ஆழ்ந்த உத்வேகத்தை அளித்து வருவதாகவும் தெரிவித்தார்.

உஸ்பெகிஸ்தானின் 80-வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் இந்த வேளையில், திருக்குறளை உஸ்பெக் மொழியில் மொழிபெயர்க்கும் முயற்சியை மேற்கொள்ள முடியுமா? என பிரதமர் மோடி கேள்வி எழுப்பினார். இதன் மூலம் அந்நாட்டின் அறிவுக் களஞ்சியம் மேலும் வளம்பெறும் என்றும், திருக்குறளின் ஆழமான கருத்துகளுடன் மக்கள் வலுவான பிணைப்பை ஏற்படுத்திக் கொள்ள முடியும் என்றும் அவர் கூறினார்.

மேலும், உலகின் தொன்மையான மொழிகளில் ஒன்றான தமிழில் இடம்பெற்றுள்ள நுண்ணறிவுகளின் மூலம், மனித சிந்தனையின் ஆழத்தையும், நமது வளர்ச்சிப் பயணத்தின் தொடக்க காலத்திலிருந்தே நிலவி வரும் அறிவுசார் பாரம்பரியத்தையும் புரிந்துகொள்ள முடியும் என்று பிரதமர் தெரிவித்தார்.

தாஷ்கண்ட் மாநிலப் பல்கலைக்கழகம் வெறும் பட்டங்களை வழங்கும் கல்வி நிறுவனமாக மட்டுமல்லாமல், அறிவைத் தேடும் அர்ப்பணிப்புமிக்க பயணத்திற்கான தளமாகவும், அறிவுக் கடலில் ஆழ்ந்து ஆராய்வதற்கான வாய்ப்பை வழங்கும் இடமாகவும் திகழ்கிறது என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

மேலும், பல்கலைக்கழகம் திரட்டியுள்ள அறிவை நூல்கள் மூலம் புதிய தலைமுறையினரிடம் கொண்டு சேர்ப்பதற்கும், மொழியறிவு இல்லாதவர்களையும் சென்றடையச் செய்வதற்கும் மேற்கொண்டு வரும் முயற்சிகள் உண்மையிலேயே பாராட்டுக்குரியவை என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *