
தனக்கு எதிராகப் போட்டியிடும் பாஜக வேட்பாளரை எங்கே காணோம்? எனச் சுவர் விளம்பரத்தைச் சுட்டிக்காட்டி மஹுவா மொய்த்ரா கிண்டலாகக் கேள்வி எழுப்பினார்.
கொல்கத்தா: நாடாளுமன்றத்தில் சிங்க பெண்ணாகச் சீறி எழுந்து ஆளும் பாஜகவை திணற வைத்தவர், மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா.
நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்பதற்கு லஞ்சம் வாங்கிய புகாரின் பேரில் அவருடைய எம்பி பதவி பறிக்கப்பட்டது. அதை எதிர்த்து அவர் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் அவர் மீண்டும் கிருஷ்ணா நகர் தொகுதி வேட்பாளராக மம்தா பானர்ஜியால் களம் இறக்கப்பட்டு இருக்கிறார்.
உத்தரப்பிரதேசம், பீகார் வரிசையில் மேற்கு வங்காளத்திலும் ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. மம்தா பானர்ஜி கட்சியைப் பொறுத்தவரை நாற்பத்தி இரண்டு தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.
மஹுவா மொய்த்ராவின் கிருஷ்ணா நகர் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் எஸ் எம்சாடி போட்டியிடுகிறார். ஆனால் இந்தத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் யார் என்ற விவரம் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இந்த நிலையில் மஹுவா மொய்த்ரா தனது பிரச்சாரத்தின்போது கண்ணில் பட்ட சுவர் விளம்பர வரைபடம் ஒன்றை சமூக வலைத்தளத்தில் கிண்டலாகப் பதிவிட்டிருக்கிறார். அதில் பாஜகவின் தாமரை சின்னம் பொறிக்கப்பட்டு, “வேட்பாளரை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லையாம்” என்ற வாசகத்தை மொழிபெயர்த்துச் சுட்டி காட்டி இருக்கிறார்.
அவருடைய மற்றொரு பதிவில், “ஜம்மு காஷ்மீரில் சட்டமன்ற தேர்தலில் நடத்த போதிய எண்ணிக்கையில் பாதுகாவலர்களின் இல்லை என்று தேர்தல் ஆணையம் அறிவித்து இருக்கிறது. அப்படி எனில், அனைத்து மாநிலங்களிலும் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்தை எப்படி முன் மொழிய முடியும் ?.
ஒரு வேளை “அக்னி வீர்” திட்டத்தின் கீழ் வீரர்களை அழைத்து வந்து ஒரே கட்டமாக அனைத்து தேர்தல்களையும் நடத்துவார்களோ ?” என்ற கேள்வியை எழுப்பி, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லாவை அதில் ‘டேக்’ செய்திருக்கிறார்.
மும்முனைப் போட்டி:
மேற்கு வங்காளத்தில் மும்மணி போட்டி நடைபெறுகிறது. திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக தனித்துப் போட்டியிடுகின்றன.
இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் காங்கிரஸ் இந்திய மதச்சார்பற்ற முன்னணி புரட்சிகர சோசியலிஸ்ட் அனைத்திந்திய பார்வர்டு பிளாக் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன.


