இந்திய கடற்படையில் ஐஎன்எஸ் நிபுண் கப்பலை இணைக்கும் விழாவில் பேசிய கடற்படைத் தலைமைத் தளபதி கிருஷ்ண சுவாமிநாதன், எத்தகைய சூழலிலும் தாக்குதலுக்கும் தற்காப்புக்கும் தயாராக இருப்பதே சிறந்த கடற்படையாகும் எனத் தெரிவித்துள்ளார்.
ஆந்திரத்தின் விசாகப்பட்டினத்தில் வடிவமைத்துக் கட்டப்பட்ட இரண்டாவது கப்பலான ஐஎன்எஸ் நிபுண், மும்பைக் கடற்படைத் துறைமுகத்தில் பணியில் சேர்க்கப்பட்டது. இதற்கான விழா கடற்படைத் தலைமைத் தளபதி கிருஷ்ண சுவாமிநாதன் தலைமையில் நடைபெற்றது.
விழாவில் பேசிய கடற்படைத் தலைமைத் தளபதி கிருஷ்ண சுவாமிநாதன், எத்தகைய சூழலிலும் தாக்குதலுக்கும் தற்காப்புக்கும் தயாராக இருப்பதே சிறந்த கடற்படையாகும் எனத் தெரிவித்தார். எல்லா நேரங்களிலும், எல்லா இடங்களிலும் இந்தியாவின் பாதுகாப்பையும் கடல்சார் நலன்களையும் பாதுகாக்கும் வலுவான செயல்பாட்டு மற்றும் போர்த் திறனைக் கட்டமைத்துப் பராமரிப்பதே நமது நோக்கமாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கடல்சார் சூழல் பெரும் போட்டி நிறைந்ததாக மாறி வருகிறது என்றும், அதில் உள்ள அச்சுறுத்தல் குறித்த கண்ணோட்டம் தொடர்ந்து உருவாகி, புதிய சவால்கள் மற்றும் சிக்கலான வடிவங்களில் வெளிப்படுவதாகவும் தெரிவித்தார். நாம் எதிர்பார்க்கும் அச்சுறுத்தல்களுக்குத் தயாராக இருப்பதும், அவை எங்கு, எப்போது எழுந்தாலும் அவற்றைத் திறம்படவும் சரியான நேரத்திலும் சமாளிக்க உதவும் நம்பகமான திறனைக் கட்டமைப்பதும் நமது கடமை என அவர் கூறினார். மேலும், மேற்குக் கடற்படைக் கட்டளையின் கீழ் நிலைநிறுத்தப்பட்டுள்ள ஐஎன்எஸ் நிபுண் கப்பல், நமக்குத் தேவையான பிரத்யேக நீருக்கடியில் செயல்படும் திறன்களுக்கு மேலும் வலுச்சேர்க்கும் என்றும் தெரிவித்தார்.



