
இந்தோனேசியாவில் பிரதமர் நரேந்திர மோடிக்கு உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது. இருநாடுகளிடையே பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்துப் புரிந்துணர்வு உடன்பாடு கையொப்பமாகியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி இந்தோனேசியாவில் மூன்று நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள அதிபர் மாளிகை முன் பிரதமர் மோடிக்கு இராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
அந்நாட்டு அதிபர் பிரபவ சுபியாந்தோவின் மாளிகையைப் பிரதமர் நரேந்திர மோடி, பேட்டரி காரில் சுற்றிப் பார்த்தார். அப்போது பள்ளி மாணவர்கள் இருபுறமும் நின்று கொடிகளை ஆட்டி அவர்களுக்கு வரவேற்பு அளித்தனர்.
பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்தோனேசியாவில் குடிமக்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான ஸ்டார் ஆப் இந்தோனேசியா என்கிற விருதை அந்நாட்டு அதிபர் பிரபவ சுபியாந்தோ வழங்கிச் சிறப்பித்தார். இருநாடுகளிடையான உறவை வலுப்படுத்துவதில் பங்காற்றியதற்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருது அந்நாட்டு மொழியில், பிந்தாங் ரிபப்ளிக் இந்தோனேசிய அதிபூர்ணா என்று அழைக்கப்படுகிறது.
இந்தோனேசிய அதிபர் மாளிகையைச் சுற்றிப் பார்த்த பிரதமர் மோடி, அதிபரின் முன்னிலையில் வருகைப் பதிவேட்டில் கையொப்பமிட்டார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்தோனேசிய அதிபர் பிரபவ சுபியாந்தோ ஆகியோர் தலைமையில் இரு நாடுகளிடையே பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்துப் பேச்சு நடைபெற்றது. இந்தப் பேச்சில் பங்கேற்ற இந்தோனேசியப் பிரதிநிதிகளைப் பிரதமர் மோடிக்கு அந்நாட்டு அதிபர் அறிமுகம் செய்து வைத்தார்.
இந்தப் பேச்சில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இந்தியக் குழுவில் வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி, செய்தித்தொடர்பாளர் ரண்தீர் ஜெய்ஸ்வால், தேசியப் பாதுகாப்பு ஆலோசகனர் அஜித் தோவல் உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர்.
இருநாடுகள் இடையே பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்துப் புரிந்துணர்வு உடன்பாடுகள் கையொப்பமாகின. அதை இருநாட்டு உயர்நிலை அதிகாரிகளும் பரிமாறிக்கொண்டனர்.
இருநாட்டு உயர்நிலைக் குழுக்களும் பேச்சு நடத்தியபின் இருநாட்டுத் தலைவர்களும் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, இருநாட்டு உறவுகளில் ஒரு புதிய பொற்காலம் தொடங்கியுள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார். பாலஸ்தீனச் சிக்கலைத் தீர்க்கவும் நீண்டகால அமைதிக்கும் இருநாடுகள் என்பதே தீர்வாகும் என்றும் அந்தத் தீர்மானத்தை இந்தியா ஆதரிப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
பெங்களூரில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனம் இந்தோனேசியாவில் ஒரு வளாகத்தைத் தொடங்கும் என்றும் பிரதமர் மோடி அறிவித்தார்.
பொன்னான இந்தோனேசியா, வளர்ச்சியடைந்த இந்தியா என்கிற கனவுகளை நனவாக்க இருநாடுகளும் ஒன்றாகப் பாடுபடும் என்றும் தெரிவித்தார்.





