வயநாடு நிலச்சரிவு – சுரங்கப்பாதையில் சிக்கிய தொழிலாளர்கள்!

கேரளத்தின் வயநாடு மாவட்டம் கல்லாடி அருகே சுரங்கப்பாதைப் பணிகள் நடைபெறும் பகுதியில் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டதில் பதினைந்துக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளே சிக்கியுள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதியில் தீயணைப்புத் துறையினரும் உள்ளூர் மக்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் மேப்பாடி- கல்லாடி இடையிலான சுரங்கப்பாதைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இப்பகுதியில் பெய்த கனமழையால் கல்லாடி அருகே சுரங்கப்பாதை பணிகள் நடைபெறும் பகுதி  அருகே நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் பணிகளுக்காகக் கொண்டுவரப்பட்ட பல  வாகனங்களும்ம் தொழிலாளர்கள் பதினைந்துக்கு மேற்பட்டோரும் மண்ணில் புதைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

தொடர்ந்து கனமழை பெய்துவருவதால் மண்ணில் புதைந்தவர்களைத் தேடும் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனினும் தீயணைப்புத் துறையினரும் அப்பகுதி பொதுமக்களும் இணைந்து மண்ணில் புதைந்தவர்களை மீட்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட பகுதிக்குத் தேசியப் பேரிடர் மீட்புப் படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

 

இதுவரை ஐந்து தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளநிலையில் மேலும் மண்ணில் புதைந்துள்ளவர்களை மீட்கும் நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நிலச்சரிவு காரணமாக முண்டகயம் சூரல்மலைச் சாலையில் வாகனப் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது. 2024ஆம் ஆண்டு வயநாடு முண்டகயம் சூரல்மலைப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் நூற்றுக்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *