
உஸ்பெக்கிஸ்தான் நாட்டுக்குச் சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி தாஷ்கண்ட் நகரில் அதிபர் சவுக்கத் மிர்சியோயேவுடன், இருநாட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாகப் பேச்சு நடத்தியுள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக உஸ்பெக்கிஸ்தான் நாட்டுக்குச் சென்றுள்ளார். அந்நாட்டின் தலைநகர் தாஷ்கண்டில் யோகாசனக் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார்.
இந்த நிகழ்ச்சியில் 52 பேர் கலந்துகொண்டு யோகாசனப் பயிற்சி செய்ததாகப் பிரதமர் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டு அந்த வீடியோவையும் பதிவிட்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியை உஸ்பெக்கிஸ்தான் அதிபர் சவுக்கத் மிர்சியோயேவ் தன் அரண்மனைக்கு வரவேற்றார். அப்போது இராணுவ இசைக்குழுவினர் இருநாட்டுத் தேசியக் கீதங்களையும் இசைத்தனர்.
இரு நாடுகள் இடையே பல்வேறு துறைகளில் உள்ள ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் அந்நாட்டு அதிபர் சவுக்கத் மிர்சியோயேவுடன் பிரதமர் மோடி பேச்சு நடத்தினார்.



