தில்லியில் பிரிக்ஸ் அமைப்பின் உச்சி மாநாட்டின் இடையே ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், ஈரான் அதிபர், ஐ.நா. பொதுச்செயலாளர் ஆகியோரைப் பிரதமர் நரேந்திர மோடி தனித்தனியே சந்தித்து உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
தில்லியில் பிரிக்ஸ் அமைப்பின் உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், சீன அதிபர் சி ஜின் பிங், ஈரான் அதிபர் மசூது பெசஸ்கியன், மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராகிம் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.மாநாட்டின் இடையே ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு நடத்தினார்.
அதில் 2030ஆம் ஆண்டுக்குள் இரு நாடுகளிடையான வணிகத்தைப் பத்தாயிரம் கோடி டாலர் மதிப்புக்கு உயர்த்துவது என்று முடிவு செய்யப்பட்டது. ரஷ்யாவுடன் தொழில்துறை ஒத்துழைப்பு, சுரங்க ரயில்பாதை, உருக்குத் தொழில்நுட்பம், வணிக நிறுவனங்கள் கூட்டாகத் தொழில் செய்தல் ஆகியன குறித்து விவாதிக்கப்பட்டது.
அணுவாற்றலை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தல், திறன்மிகு இந்திய தொழிலாளர்களை ரஷ்யாவில் பணியமர்த்தல், அரிய கனிமங்கள், உரத்தொழில் ஆகியன குறித்தும் பேச்சு நடத்தினர். ஈரான் அதிபர் மசூது பெசஸ்கியனுடன் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு நடத்தினார். அப்போது இரு நாடுகள் இடையே பல்வேறு துறைகளில் உள்ள ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்துப் பேசினர்.
இதேபோல் ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச்செயலாளர் அன்றானியோ குட்டரசைப் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார். அப்போது உலக நாடுகளில் நிலவும் தகராறுகளைத் தீர்ப்பது, எல்லை தாண்டிய பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்துவது ஆகியன குறித்து இருவரும் விரிவாகப் பேசினர்.


