நடிகை மீரா மிதுன் தாக்கல் செய்த மனு: தள்ளுபடி சென்னை ஐகோர்ட்

நடிகையும், மாடல் அழகியுமான மீரா மிதுன் பட்டியலினத்தவர் குறித்து அவதுாறாகப் பேசி, சமூக வலைதளத்தில் கடந்த 2021ம் ஆண்டு வீடியோ வெளியிட்டிருந்தார். இது குறித்த புகாரில், போலீசார், வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட ஏழு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, மீரா மிதுன், அவரது நண்பர் சாம் அபிஷேக் ஆகியோரை கைது செய்தனர். பின், ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர் .

மீரா மிதுன், விசாரணைக்கு ஆஜராகாததால், 2022ம் ஆண்டில் அவருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்தது. மூன்று ஆண்டுகளாக மீரா மிதுன் தலைமறைவாக இருந்தார். சமீபத்தில் சென்னை திரும்பிய மீரா மிதுன், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜரானார்.

இந்நிலையில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வன்கொடுமை வழக்கை ரத்து செய்யக்கோரி மீரா மிதுன் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், தினமும் 20 மாத்திரைகள் எடுத்து வருவதால் தமது உடல் நலன் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஊட்டச்சத்து குறைப்பாடும் அதிகளவில் உள்ளதாகவும் மனுவில் தெரிவித்திருந்தார்..

தற்போதைய சூழலில் விசாரணையை எதிர் கொள்ள முடியாத நிலையில் உள்ளதால் வழக்கை ரத்து செய்ய வேண்டுமெனவும் மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட், வழக்கை ரத்து செய்யக்கோரி விசாரணை நீதிமன்றத்தில்தான் மனுத்தாக்கல் செய்ய முடியும் என கூறி மீரா மிதுனின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *