
வழக்கு தொடர்ந்தவர் வாழ்வு முடிந்த சோகம்! கொலையா?
மர்ம மரணம்… அதிர்ச்சியில் கேரளா…
கேரளாவில், கேரளா முதல்வர் பினராய் விஜயன், மற்றும் அவரின் மகள் வீணா விஜயன் மீது புகார் அளித்தவர், மர்மமான முறையில் இறந்த கிடந்துள்ள சம்பவம், அம்மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் கொச்சி, களமசேரி பகுதியைச் சேர்ந்தவர் கிரீஷ்பாபு. பொது சேவகர் என்பதால் பொது நலம் சார்ந்த கருத்துக்களை அவ்வப்போது பகிர்ந்து வருவார்.
அநீதியை எதிர்த்து அஞ்சாமல் குரல் கொடுப்பார். அது மட்டுமல்லாது அரசியல் கட்சித் தலைவர்களுக்கு எதிராக ஊழல் வழக்கு தொடர்பாக வழக்கு தொடுப்பார்.
இந்நிலையில் கேரளாவில் உள்ள ஒரு தாது மணல் நிறுவனத்திடமிருந்து முதல்வர் பினராய் விஜயன் மகள் வீணா விஜயன், முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி மற்றும் முஸ்லிம்லீக் தலைவர் குஞ்ஞாலிக் குட்டி உள்ளிட்ட முக்கிய சில அரசியல் பிரமுகர்கள் பணம் வாங்கியதாகப் புகார் ஒன்று கொடுத்தார்.
குறிப்பிட்ட நிறுவனத்தின் மீது வருமான வரித்துறை சோதனை நடத்தியபோது இந்த விவகாரம் அனைவருக்கும் தெரிய வந்தது. ஆனால் இவ்வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனை எதிர்த்துக் கிரீஷ் கேரளா உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.
இந்நிலையில் அவர் நேற்று இரவு அவரது அறையில் உறங்கச் சென்றுள்ளார். காலை வெகுநேரமாகியும் அவர் உறங்கிய அறைக் கதவு திறக்கப்படாததால், சந்தேகமடைந்த அவரது மனைவி அக்கம் பக்கத்து வீட்டினரை அழைத்துக் கதவைத் திறந்து பார்த்தபோது அவர் மர்மமான முறையில் இறந்து கிடப்பது பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் இதுகுறித்து சம்மந்தப்பட்ட காவல் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, விரைந்து வந்த போலீசார் உடலைக் கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கிரீஷ் மரணம் மர்ம மரணமாகப் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
நேற்று கிரீஷ் தொடுத்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், இன்று அவர் மர்மமான முறையில் இறந்த நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாகியுள்ளது.முதல்வர் மகள் மற்றும் அரசியல் புள்ளிகள்மீதான வழக்கில் இது போன்று நிகழ்ந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீப காலமாகக் கேரளா குறித்த வன்முறைகள், கொலைகள், செய்திகள் நிறைய வந்தவண்ணம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

