
நாடு முழுவதும் பேசப்படும் பொருளாக தொகுதி மறுவரையறை மாறி இருக்கிறது. தென் மாநிலங்களில் அதிகாரக் குரலை ஒடுக்கும் வகையில் மத்திய அரசு செயல்படுவதாக தமிழகத்திலிருந்து போர் குரல்கள் எழத் தொடங்கி இருக்கின்றன. இன்று மாலை 4 மணிக்கு நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு மற்றும் யூனியன் பிரதேச சட்டத்திருத்த மசோதாக்கள் மீது இறுதி வாக்கெடுப்பு நடத்தி நிறைவேற்றத் திட்டமிடப்பட்டுள்ளது.இதனால் , இன்றைய நாள் இந்திய அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான நாளாக கருதப்படுகிறது. இது பற்றிய விரிவான தகவல்களை பார்க்கலாம்…
கடந்த இரண்டு நாட்களாக நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடரில் விவாதிக்கப்பட்டு வந்த மூன்று முக்கிய மசோதாக்கள் மீது, இன்று மாலை 4 மணிக்கு இறுதி வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.. இந்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டால், தமிழகத்தின் மக்களவைத் தொகுதி எண்ணிக்கை உயரும் என்றாலும், வட மாநிலங்களின் கை ஓங்கும் என்பதால் தான் இது தமிழக அரசியலில் அதிக விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்த 3 மசோதாக்களில் முக்கியமானது மகளிர் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவது தொடர்பானது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே 2023ஆம் ஆண்டு மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டிருந்தாலும், அதை நடைமுறைக்கு கொண்டு வருவதற்கான கட்டமைப்பு மாற்றங்கள் தேவைப்படுவதாக மத்திய அரசு கூறி வருகிறது. அதற்காகத்தான் தற்போதைய மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.
இப்போது, இடப் பங்கீட்டு நிலவரத்தைப் பார்ப்போம். தற்போது தேசிய ஜனநாயகக் கூட்டணி 293 இடங்களையும், பாஜக 240 இடங்களையும், அதன் கூட்டணிக் கட்சிகள் 53 இடங்களையும் கொண்டுள்ளன. 360 என்ற இலக்கை அடைய, தற்போது அதற்கு 67 வாக்குகள் குறைவாக உள்ளன. NDA அல்லாத கூட்டணிக்கு 241 இடங்கள் உள்ளன. இதன் பொருள், காங்கிரஸுக்கு 98 இடங்கள் அதிகபட்சம் மற்றும் பிற எதிர்க்கட்சிகள் உள்ளன; அவர்கள் ஒன்றுபட்டால், அவர்களால் இந்தத் திருத்தத்தைத் தடுக்க முடியும். இவர்களில், 7 சுயேச்சை எம்.பி.க்கள் எந்தக் குழுவிலும் சேர்க்கப்படவில்லை.
மக்களவை 541 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. அவையில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் வாக்களித்தால் எந்தவொரு அரசியலமைப்புத் திருத்தத்திற்கும் மக்களவையில் 360 வாக்குகள் தேவைப்படுகிறது. இந்த மாற்றத்தின் அடிப்படையில், தமிழகத்தில் 59 மக்களவைத் தொகுதிகள் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதேபோல் தென் இந்தியாவின் மற்ற மாநிலங்களான கேரளா, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்களிலும் தொகுதி எண்ணிக்கை கணிசமாக உயரக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் , பீகார், உத்தர பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் மிகப்பெரிய அளவில் எண்ணிக்கை உயரும். அதாவது அந்த மாநிலங்களுக்கு பாதிக்கு பாதி கூட எம்பிக்கள் கிடைப்பார்கள். இதனால் தென் மாநில எம்பிக்கள் ஆதரவு தேவையில்லை என்ற நிலை உருவாகலாம் என்பதே தென்னிந்தியாவிலிருந்து எழும் எதிர்ப்புக்கு காரணம். மேலும், இதுகுறித்து நேற்று நாடாளுமன்றத்தில் பேசிய அமித் ஷா, தென் மாநிலங்கள் மக்கள் தொகை கட்டுப்பாட்டை சரியாக பின்பற்றியதற்காக தண்டிக்கப்பட மாட்டார்கள் என்று உறுதியாக தெரிவித்துள்ளார்.
மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி எண்ணிக்கை மாற்றப்படும்போது, அந்த மாநிலங்களின் நலன்கள் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தொகுதி மறுவரையறை குறிப்பாக,” தமிழ்நாட்டில் தேர்தல் காலத்தை முன்னிட்டு இந்த மசோதா கொண்டு வரப்படுவது குறித்து சிலர் அச்சம் தெரிவித்து வருவது தேவையற்றது. தொகுதி மறுவரையறை உடனடியாக அமலுக்கு வரும் ஒன்றல்ல. அதற்கு பல கட்ட நடவடிக்கைகள் அவசியம். முதலில் தொகுதி மறுவரையறை ஆணையம் அமைக்கப்பட்டு, அதன் ஆய்வு மற்றும் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை தயாரிக்கப்படும்.
அதன் பின்னர் அந்த அறிக்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும். அதற்குப் பிறகு ஜனாதிபதியின் ஒப்புதல் கிடைத்தால்தான் அது அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வரும்” என்று கூறியுள்ளார். இதனால், 2029ஆம் ஆண்டுக்கு முன்பு இந்த மாற்றங்கள் நடைமுறைக்கு வரும் வாய்ப்பு இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். அதுவரை நடைபெறும் அனைத்து தேர்தல்களும் தற்போதைய தொகுதி எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டே நடைபெறும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார். இதன் மூலம் உடனடி மாற்றங்கள் ஏற்படும் என்ற அச்சத்திற்கு இடமில்லை என்ற கருத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் , இன்று மதியம் வரை இந்த மசோதாக்கள் மீதான இறுதிக்கட்ட விவாதங்கள் நடைபெறும். அதனைத் தொடர்ந்து மாலை 4 மணிக்கு ‘டிவிஷன்’ (Division) முறையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, மசோதாக்கள் நிறைவேற்றப்பட உள்ளன. இந்த விஷயம் மூலமாக நாம பொறுத்திருந்து பார்க்கலாம்.. ஆளும் தரப்பிற்குப் போதிய பலம் உள்ளதா .. இல்லை எதிர் தரப்பிற்கு இருக்கிறதா என்று.. குறிப்பாக தென் மாநிலங்களுக்கு பாதிப்பு ஏற்படாது என்ற உறுதியான விளக்கம் வழங்கப்பட்டிருந்தாலும், தமிழகம் உள்ளிட்ட பல முக்கிய மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.



