Puducherry: மாணவர்களோடு கலந்துரையாடிய ஆளுநர்!

பெண்களுக்கு 33 % இடஒதுக்கீடு நடைமுறைக்கு வந்தால் புதுச்சேரி மாநிலத்தில் 11 சட்டமன்ற உறுப்பினர்களும் தமிழகத்தில் 77 சட்டமன்ற உறுப்பினர்களும் பெண்களாக இருப்பார்கள் என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்…

புதுச்சேரி அரசுப் பள்ளிகளைத் தொடர்ந்து பார்வையிட்டு வரும் மாண்புமிகு துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், இன்று ஆலங்குளம் அரசு தொடக்கப்பள்ளி மற்றும் அரசு உயர்நிலைப் பள்ளியைப் பார்வையிட்டார்.அங்கு மாணவர்களோடு கலந்துரையாடினார். மாணவர்களோடு சேர்ந்து ஸ்மார்ட் வகுப்பறையைக் கவனித்தார்.

டெங்கு கொசு ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நாடகத்தை அரங்கேற்றிய மாணவர்களைப் பாராட்டினார். மாணவர்களுக்காக வைக்கப்பட்டிருந்த மதிய உணவைப் பரிமாறினார்.தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய துணைநிலை ஆளுநர், டெங்கு கொசு ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு மாணவர்கள் ஏற்படுத்தும்போது அது மக்களுக்கு நன்றாகச் சென்றடையும். எல்லாவற்றுக்கும் மேலாகப் பெண்களுக்கு இன்று மகிழ்ச்சியான நாள்.

பாரத தேசத்தில் எந்த அங்கீகாரம் வேண்டும் என்று பெண்கள் பொது வாழ்க்கையில் இருக்கிறார்களோ அந்த 33 % இட ஒதுக்கீடு வழங்கப் பாரதப் பிரதமர் தலைமையில் நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. பல பெண்கள் பொதுவாழ்க்கைக்கு வர உதவியாக இருக்கும்.

பெண்கள்மூலம் சமுதாயம் பயனடைவிற்கும் பலனடைவதற்கும் மிகுந்த உதவியாக இருக்கும்.சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் கழித்து, வாக்காளர்களில் ஏறக்குறைய 50 % ஆக இருக்கும் பெண்களுக்கு 33 % இடஒதுக்கீடு நடைமுறைக்கு வந்தால் புதுச்சேரி மாநிலத்தில் 11 சட்டமன்ற உறுப்பினர்களும் தமிழகத்தில் 77 சட்டமன்ற உறுப்பினர்களும் பெண்களாக இருப்பார்கள். தமிழகத்தில் 13 பெண்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருப்பார்கள். இது மிகப்பெரிய வாய்ப்பு.

அதற்காகப் பாரதப் பிரதமருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.துணைநிலை ஆளுநராக உண்மையாக மக்களுக்குப் பணியாற்ற வேண்டும் என்று பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். பெண்களுக்கான உதவித்தொகை குறித்து, என்னிடம் வரும் கோப்புகளின் அடிப்படையில்தான், அதிகாரிகளிடமிருந்து கிடைக்கும் தகவலைகளின் அடிப்படையில்தான் கூறுகிறேன். அதற்காகப் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

ஆளுநராக மக்கள் பணியைத் தான் செய்து கொண்டிருக்கிறேன். நல்ல எண்ணத்தோடு ஒரு திட்டம் தொடங்கப்பட்டிருக்கிறது. அது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. சட்டமன்ற உறுப்பினர்கள் மூலமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அது தொடங்கப்பட்டிருக்கிறது. அதைப் பாராட்ட வேண்டும்.“ஆசாதி கா அம்ருத் மகோத்சவ்“ சுதந்திரத்தின் 75வது ஆண்டு கொண்டாட்டத்தின்போது தொடங்கி 75 பள்ளிகளுக்குச் செல்ல வேண்டும் என்று குறிக்கோளோடு பார்வையிட்டு வருகிறேன்.

அப்கோது அரசுப் பள்ளி மாணவர்களின் அறிவாற்றலைக் கண்டேன். அந்தப் பள்ளி குழந்தைகளுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில்தான் மிகவும் கடுமையாக முயற்சி செய்து அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியில் 10 % இட ஒதுக்கடை பெற்றிருக்கிறோம்.

அந்த மாணவ-மாணவிகள் பாரதப் பிரதமருக்கு நேற்று நன்றி கடிதம் எழுதி இருக்கிறார்கள். அது மிகுந்த பாராட்டைப் பெற்றிருக்கிறது. புதுச்சேரியில் உள்ள ஆசிரியர்கள் எந்த அளவிற்கு பயிற்சி கொடுத்தார்கள் என்று அதில் பேசியிருக்கிறார்கள்.தெலங்கானா ராஸபவனில் கூட அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களின் திறன் மேம்பாட்டு பயிற்சி ஒன்று நடக்க இருக்கிறது.

கல்வி சாரா செயல்பாடுகளில் விளையாட்டு, கலை, பண்பாடு ஆகியவற்றில் மாணவர்களுடைய திறமையை மேம்படுத்துவதற்கும், மற்ற குழந்தைகளை ஊக்கப்படுத்துவதற்கும், எல்லா விதத்தில் அவர்களுக்கு உறுதுணையாக இருப்பதற்கும், பொதுப் போட்டிகளில் அவர்கள் கலந்து கொள்ள உதவி செய்யும் நோக்கத்தில் இந்தத் திட்டத்தைத் தொடங்குகிறோம்.

அரசு மருத்துவமனைகளும் அரசு பள்ளிகளும் சாமானிய மக்களுக்குப் பலன்தர வேண்டும் என்பது என்னுடைய அடிப்படையான ஆசை என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *