
மணிப்பூர் விவகாரம் குறித்து இரு அவைகளிலும் விவாதிக்கக்கோரி எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை முடக்கி வருகின்றன
புதுடெல்லி:மணிப்பூரில் 160-க்கு மேற்பட்டோரை பலி வாங்கிய கலவரம் இன்னும் ஓயவில்லை. மாறாக அங்கு நடந்துள்ள கொடூர செயல்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகள் வெளியாகி நாட்டையே உலுக்கி வருகிறது. இதில் முக்கியமாக 2 பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்டு, நிர்வாணமாக ஊர்வலம் கொண்டு சென்ற வீடியோ பதிவுகள் மக்களை பதற வைத்துள்ளன.
மணிப்பூர் விவகாரத்தை தீவிரமாக எடுத்துள்ள எதிர்க்கட்சிகள், இந்த விவகாரத்தில் பிரதமர் மோடியின் அறிக்கை கேட்டும், இரு அவைகளிலும் விவாதிக்கக்கோரியும் நாடாளுமன்றத்தை முடக்கி வருகின்றன.இந்நிலையில், மணிப்பூர் மாநிலத்தில் இயல்புநிலை எப்போது திரும்பும் என பிரதமர் மோடி கூற வேண்டும் என்றும் மணிப்பூரில் நிலைமையை சரிசெய்ய மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் பற்றி பிரதமர் இரு அவைகளிலும் விளக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

