அயோத்தி பால இராமர் கோவில் பிரதமர் நரேந்திர மோடி வழிபாடு!

Advertisements

உத்தரப் பிரதேசத்தின் அயோத்தியில் உள்ள இராமர் கோவில் கோபுர உச்சியில் உள்ள கொடிக்கம்பத்தில் காவிக்கொடியைப் பிரதமர் நரேந்திர மோடி ஏற்றி வைத்தார். இராமர் கோவில் கொடியேற்றத்தையொட்டி அயோத்திக்கு விமானத்தில் சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆளுநர் ஆனந்திபென் பட்டேல், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் பூங்கொத்துக் கொடுத்து வரவேற்றனர். அயோத்தி நகர வீதிகளில் காரில் பிரதமர் நரேந்திர மோடி உலா வந்தார்.

அப்போது இருபுறமும் நின்ற மக்கள் கையசைத்து அவருக்கு வாழ்த்துத் தெரிவித்தனர். பிரதமர் மோடியும் கைகூப்பி அவர்களுக்கு நன்றி தெரிவித்தார். அயோத்தி இராமர் கோவிலின் கொடியேற்ற விழாவில் பிரதமர் நரேந்திர மோடி சேசாவதாரக் கோவிலில் வழிபாடு செய்தார்.
வசிஷ்டர், விசுவாமித்திரர், அகத்தியர், வால்மீகி ஆகிய முனிவர்களின் கோவில்களில் பிரதமர் நரேந்திர மோடி வழிபட்டார்.

அன்னபூரணி கோவிலிலும் பிரதமர் நரேந்திர மோடி வழிபாடு செய்தார். அவருடன் உத்தரப் பிரதேச ஆளுநர் ஆனந்திபென் பட்டேல், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோரும் சென்றனர். இராமர் கோவில் கருவறைக்குச் செல்லும் வழியில் நின்ற பொதுமக்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். அவர்களும் பதிலுக்குக் கையசைத்து வாழ்த்துக் கூறினர்.

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தும் பிரதமருடன் இராமர் கோவிலின் கருவறைக்குள் சென்றார். அங்கு இருவரும் ஆரத்தி எடுத்து வழிபாடு செய்தனர். அப்போது ஆளுநர் ஆனந்திபென் பட்டேல், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோரும் உடனிருந்தனர்.இராமர் கோவில் கோபுர உச்சியின்மேல் உள்ள கொடிக்கம்பத்தில் சூரியன் பொறிக்கப்பட்ட காவிக்கொடியை வேதமந்திரங்கள் முழங்கப் பிரதமர் நரேந்திர மோடி ஏற்றிவைத்தார். இது கோவில் கட்டுமானம் நிறைவுபெற்றதன் அடையாளமாகக் கருதப்படுகிறது.

கொடியேற்று விழாவையொட்டிப் பிரதமரும் இலட்சக்கணக்கான பக்தர்களும் வந்திருப்பதால் அயோத்தியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *