
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் பிறந்த நாளையொட்டிப் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட தலைவர்கள் புகழஞ்சலி செலுத்தியுள்ளனர்.
இராமேசுவரத்தில் பிறந்து திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி, சென்னை குரோம்பேட்டை எம்ஐடி ஆகியவற்றில் படித்து இந்திய விண்வெளி ஆய்வுத்துறையில் விஞ்ஞானியாக இருந்தவர் அப்துல்கலாம்.
வாஜ்பாய் ஆட்சியில் பிரதமரின் முதன்மை அறிவியல் ஆலோசகராக இருந்த அவர் 1998ஆம் ஆண்டு போக்ரானில் அணுகுண்டு வெடித்துச் சோதனை செய்வதில் முதன்மைப் பங்காற்றினார்.
2002ஆம் ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டு வரை இந்தியாவின் குடியரசுத் தலைவராக இருந்த அவர் மாணவர்களுடன் உரையாடி அவர்களின் அறிவுத் தேடலை ஊக்குவிப்பதில் அக்கறை கொண்டிருந்தார்.
2015ஆம் ஆண்டு மறைந்த அவருக்குப் பாம்பன் தீவில் பேய்க்கரும்பு என்னுமிடத்தில் நினைவிடம் எழுப்பப்பட்டுள்ளது. இன்று அப்துல்கலாமின் 95ஆவது பிறந்த நாளையொட்டிப் பிரதமர் நரேந்திர மோடி விடுத்துள்ள செய்தியில், தொலைநோக்குப் பார்வையுடன் இளைஞர்களுக்கு எழுச்சியூட்டியவர் என்றும், மாபெரும் இலக்குகளை அடையக் கனவு காணும்படி கூறியவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கடின உழைப்பும், பணிவும் வெற்றியின் அடிப்படை என்பதை அவர் வாழ்வு நமக்கு நினைவூட்டுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விடுத்துள்ள செய்தியில், அறிவியல் ஞானி அப்துல் கலாம், அறிவியல், பாதுகாப்பு, , தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் மூலம், நாட்டுப்பற்று மற்றும் நாடே முதன்மையானது என்னும் கொள்கையுடன் மிகப்பெரிய உயரத்தை எட்டியவர் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆசிரியர், கனவு காண்பவர், தொலைநோக்குப் பார்வையாளர் எனப் பன்முகத்திறமையுடன் விளங்கிய அப்துல்கலாம், அர்ப்பணிப்பும் அறிவும் நாட்டை எத்தகைய உயரத்துக்குக் கொண்டுசெல்லும் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்கியவர் என்று தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளது.
நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள செய்தியில், தமிழ்வழியில் படித்தால் மண்ணை மட்டுமல்ல விண்ணையும் ஆளலாம் என உலகிற்கு உணர்த்திய அறிவியல் ஞானி! இளைய தலைமுறையினரிடையே நம்பிக்கை விதைகளை விதைத்த விஞ்ஞான உழவன்! தமிழ்ப்பேரினத்தின் அறிவியல் அடையாளம் அப்துல்கலாமின் பெரும்புகழ் போற்றுவோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் விடுத்துள்ள செய்தியில் எப்போதும் மாணவர்களையும் இளைஞர்களையும் நம்பிக்கையுடன் முன்னேற்றத்தின் பாதையில் வழிநடத்தி, அவர்களிடம் கனவுகளை விதைத்து வந்தவர் அப்துல் கலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.



