Pinarayi Vijayan:மீட்புப் படையினரை தவிர வயநாட்டுக்கு யாரும் வர வேண்டாம்!

Advertisements

நாளை அனைத்து கட்சி கூட்டத்துக்குக் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் அழைப்பு விடுத்துள்ளார்.

திருவனந்தபுரம்:கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. இதன்படி வயநாடு, திருச்சூர், கோழிக்கோடு, மலப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது.

மழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டி உள்ள இடங்களில் நிலச்சரிவு ஏற்படக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது. நேற்று முன்தினம் இரவு முதல் வயநாடு மாவட்டத்தில் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது.

இதனைத்தொடர்ந்து வயநாட்டில் அடுத்தடுத்து 3 நிலச்சரிவுகள் ஏற்பட்டு, தற்போது வரை கிட்டதட்ட 170க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்புகள் அதிகரிக்கும் என்றும் அஞ்சப்படுகிறது. இந்தத் துயர சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நேற்று முழுவதும் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்ற நிலையில், நள்ளிரவில் நிறுத்தி வைக்கப்பட்டன. தொடர்ந்து இன்று மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை 1000த்திற்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் 200க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாக மீட்கப்பட்டவர்கள் தெரிவித்த நிலையில், தேடுதல் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ராணுவ வீரர்கள், கடற்படை குழுவினர், தேசிய பேரிடர் மீட்புப் படை, இந்திய கடலோரக் காவல் படை உள்ளிட்ட பல்வேறு முகமைகள் தேடுதல்-மீட்புப் பணியில் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர். விமானப் படை ஹெலிகாப்டர்கள், ராணுவத்தின் மோப்ப நாய்களும் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், திருவனந்தபுரத்தில் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் மூத்த அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் மீட்புப் பணியில் ஈடுபட்டுவரும் குழுவினருடன் அவசர ஆலோசனையில் இன்று ஈடுபட்டார். இதனைத் தொடர்ந்து, நாளை அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும், நிவாரண உதவிகளை அளிக்க அழைப்பு விடுத்துள்ள முதல்-மந்திரி பினராயி விஜயன், வயநாட்டுக்கு மீட்புப் படையினரை தவிர வேறு யாரும் செல்ல வேண்டாம் என்றும் மீட்புப் பணிகளுக்கு இடையூறு ஏற்பட வாய்ப்புள்ளதால் அப்பகுதியில் மற்றவர்கள் சூழ்நிலை காரணமாகத் தடுத்து நிறுத்தப்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *