
ஒட்டுமொத்த அழகையும் ரசிக்கச் சிறந்த இடம்! பிச்சாவரம்
பிச்சாவரம் காடு கடலூர் மாவட்டம் ‘கிள்ளை’ என்னும் ஊரில் அமைந்திருக்கிறது. சிதம்பரம் நகரிலிருந்து 12 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள பிச்சாவரத்துக்கு, பேருந்தில் செல்லக் கட்டணம் பத்து ரூபாய். சென்னை, புதுவை, கடலூர் மார்க்கமாக வாகனங்களில் வரும் சுற்றுலா பயணிகள் சிதம்பரத்துக்கு வராமல் பி.முட்லூர் அருகே பிரியும் புறவழிச்சாலை வழியாகப் பிச்சாவரத்துக்கு செல்லலாம். பிச்சாவரம் வனப்பகுதியைச் சுற்றிப் பார்க்க, அரசு சார்பில் படகு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மோட்டார் படகில் ஆறு நபர்களுக்கு 2,800 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. வனப்பகுதிக்குள் ஏற்படுத்தப்பட்டுள்ள கால்வாய் வழியாக, இந்தப் படகு 45 நிமிடங்களில் வனத்தைச் சுற்றி வரும். துடுப்பு படகில் பயணிக்க நபர் ஒருவருக்கு 75 ரூபாய் கட்டணம். இதில் பயணிக்க ஒரு மணி நேரம் ஆகும். ஒரு படகில் ஐந்து பேர் பயணிக்கலாம்.

காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை படகு சவாரிக்கு அனுமதி உண்டு. காட்டின் ஒட்டுமொத்த அழகையும் ரசிக்க, கரையில் கண்காணிப்பு கோபுரம், நவீன மைக்ரோஸ்கோப் வைக்கப்பட்டுள்ளன. உணவகம், பயணிகள் காத்திருப்பு அறை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், விளையாட்டுப் பூங்கா என, பல்வேறு வசதிகளும் சுற்றுலாத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்பு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பிச்சாவரம் காடுகளின் சிறப்புகள்:
அலையாத்தி தாவரங்கள் கொண்ட இந்தப் பிச்சாவரம் காட்டில் சுரபுன்னை மரங்கள் அடர்ந்திருக்கின்றன. இம்மரத்தின் காய்கள் முருங்கைக்காய் போல் நீண்டிருக்கும். இந்தக் காய்கள் சேற்றில் விழுந்து செடியாகி, சில ஆண்டுகளில் மரமாக வளர்ந்து விடும்.
பழுத்த இலைகள் நீரில் விழுந்து அழுகி, உணவாகக் கிடைப்பதால், இங்கு மீன், இறால்கள் அதிக அளவில் கிடைக்கின்றன. உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து, பறவைகள் இங்கு வலசை வருகின்றன.

செப்டம்பர் முதல் ஏப்ரல் மாதம்வரை பறவைகளின் வரவு அதிகமாக இருக்கும். குறிப்பாக நவம்பர் முதல் ஜனவரி வரை பிச்சாவரம் வரும் பறவைகளின் எண்ணிக்கை கணிசமாக உயரும். இதற்கு அந்தக் காலகட்டத்தில் இயற்கையாகவே சுற்றுப்புறத்தில் அதிகரிக்கும் இரை உயிரினங்களே காரணம்.

மேலும் வெளிநாடுகளிலிருந்து வலசை வரப் பறவைகள் எடுத்துக்கொள்ளும் கால அளவும் வருடம்தோறும் இங்குக் குடியேறும் பறவைகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது.

