
குலசேகரம்: தமிழ்நாட்டில் உள்ள பல அருவிகளில் சீசன் காலத்தில், ஒரு சில மாதங்கள் மட்டுமே தண்ணீர் விழுகிறது. ஆனால் குமரி மாவட்டத்தில் உள்ள திற்பரப்பு அருவியில் ஆண்டின் அனைத்து நாட்களிலும் தண்ணீர் கொட்டுகிறது. வறட்சியான கோடை காலம் என்றாலும் இங்கு சிறிதளவினும் தண்ணீர் விழுந்து கொண்டே தான் இருக்கும். இதனால் தான் திற்பரப்பு அருவி குமரியின் குற்றாலம் என்றழைக்கப்படுகிறது.
மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி காடுகளில் மூலிகை, இயற்கை வளங்களை அள்ளிக்கொண்டு பாய்ந்தோடிவரும் கோதையாறு திற்பரப்பில் அருவியாக கொட்டுகிறது. பேச்சிப்பாறை உள்ளிட்ட அணைகளில் இருந்து திறக்கப்படும் உபரிநீரும் கோதையாற்றில்தான் பாய்ந்து செல்கிறது.
இதனால் மழைக்காலங்களில் திற்பரப்பு அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டும். இந்த அருவியில் ஆனந்த குளியல் போட வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து பலரும் வேன், பஸ்களில் வந்து செல்கின்றனர். விடுமுறை மற்றும் சீசன் காலங்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும்.
உள்ளூர் விடுமுறை, வாரவிடுமுறை நாட்களிலும் திற்பரப்பு அருவி சுற்றுலா பயணிகள் கூட்டத்தால் களைகட்டும். திற்பரப்பு அருவியில் பெண்கள், இளம் வயது சிறுமிகளின் வசதிக்காக தனித்தனியாக குளிக்கும் இடவசதி உள்ளது. கடந்த சில நாட்களாக குமரி மாவட்டத்தில் கடும் வெயில் சுட்டெரித்து வருகிறது. ஆகவே மக்கள் நீர்நிலை சார்ந்த சுற்றுலா தலங்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.
அதேபோல் திற்பரப்பு அருவிக்கும் சுற்றுலா பயணிகள் குடும்பம் குடும்பமாக படையெடுத்து வருகின்றனர். நேற்று காலை முதலே திற்பரப்பு அருவியில் கூட்டம் அலைமோதியது. சுற்றுலா பயணிகளும் அதிக அளவில் குவிய தொடங்கினர். அவர்கள் உற்சாகத்தோடு அருவியில் ஆனந்த குளியல் போட்டனர்.

