ஆறு மாதங்களில் மின்சார வாகனங்களின் விலை பெட்ரோல் வாகனங்களின் விலை அளவுக்குக் குறைந்து விடும் என்று மத்தியச் சாலைப் போக்குவரத்து நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
தில்லியில் இந்தியத் தொழில் வணிகக் கூட்டமைப்பு மாநாட்டில் அமைச்சர் நிதின் கட்கரி கலந்துகொண்டு பேசினார். அப்போது, இந்தியாவின் எரியாற்றல் தேவைக்கு இப்போது புதைபடிவ எரிபொருளைச் சார்ந்தே உள்ளதாகவும் இதனால் பெரும் பொருளாதாரச் சுமை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் பெட்ரோலிய எரிபொருள் இறக்குமதிக்கு ஆண்டுக்கு 22 இலட்சம் கோடி ரூபாய் செலவிடப்படுவதாகக் குறிப்பிட்டார். மாசில்லா எரியாற்றல் உற்பத்தி மூலமே நாடு முன்னேற்றமடையும் என்றும் அவர் தெரிவித்தார்.
பெட்ரோலுக்கு மாற்று எரிபொருளான எத்தனால் தயாரிப்பின் மூலம் கரும்பு விவசாயிகள் கூடுதலாக 45 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் ஈட்ட முடியும் என்று குறிப்பிட்டார்.
அடுத்த ஆறு மாதத்தில் பெட்ரோல் கார்களின் விலை அளவுக்கு, மின்சாரக் கார்களின் விலையும் குறையும் என்றும் அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.


