தவெக ஆட்சியில் உணவுப் பொருள்களின் விலை 4 மாதங்களில் 40 சதவீதம் உயா்ந்துவிட்டது என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.
சேலத்தில் அதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு பொது கூட்டம் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அவர் பேசியபோது, தவெக ஆட்சிக்கு வந்ததில் இருந்து தலைகால் புரியாமல் பேசிக்கொண்டு இருப்பதாகக் கூறினார். ஏற்கனவே அ.தி.மு.க. ஆட்சியில் அறிவித்த திட்டத்திற்கு பெயரை மாற்றி வைத்து, வெற்றி என பெயரை சூட்டி மகிழ்ந்து கொண்டிருப்பதாகத் தெரிவித்தார். ஒரு ரூபாய் செலவு செய்துவிட்டு, ஒரு லட்சம் ரூபாய்க்கு விளம்பரம் செய்வதாகக் கூறினார்.
தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிச்சாமி, தவெகவின் மூலதனமே ரீல்ஸ் தான் என்றும அதை வைத்தே ஆட்சிக்கு வந்துவிட்டதாக விமர்சித்தார். உணவுப் பொருள்களின் விலை 4 மாதங்களில் 40 சதவீதம் உயா்ந்துவிட்டது என்று குற்றம் சாட்டினார். ஏற்கெனவே வாங்கிய கடனுக்கு வட்டி கட்டும் சூழலில், புதிய தலைமைச் செயலகத்திற்கு என்ன அவசியம்? என்று கேள்வி எழுப்பினார். மீனவா் குடியிருப்பு பகுதியில் தலைமைச் செயலகம் கட்டுவது ஏற்புடையதல்ல என்று குறிப்பிட்டார்.



