பெரம்பலூர் மருதையாற்றில் கழிவுநீர் கலப்பதைத் தமிழ்நாடு அரசு உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பச்சைமலைக் குன்றுகளின் கீழக்கணவாய், செல்லியம்பாளையம் பகுதிகளில் இருந்து உருவாகிப் புதுநடுவலூர், நொச்சியம், விளாமுத்தூர், நெடுவாசல் வழியே பாய்ந்தோடி வரும் மருதையாறு பெரம்பலூர் – அரியலூர் மாவட்டங்களில் பல சிற்றோடைகளைத் தன்னகத்தே இணைத்து வழியெங்கும் வளம் சேர்ப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
பெரம்பலூர் நகராட்சியில் வெளியாகும் கழிவுநீரைச் சுத்திகரிக்காமல் அப்படியே ஓடையில் திறந்து விடுவதாகவும், அது மருதையாற்றில் கலப்பதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தமிழ்நாடு அரசு இயற்கையின் அருங்கொடையான ஆற்றுநீரை மாசுபடுத்திச் சுற்றுச்சூழலை நாசப்படுத்துவது, இயற்கைக்கும், மக்களுக்கும் செய்கின்ற பச்சைத்துரோகம் என்று சீமான் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூரில் பாதாளச் சாக்கடை கழிவுநீரைச் சுத்திகரிக்க இயலாவிட்டால், சுத்திகரிப்பு நிலையத்தை நிரந்தரமாக மூடுவதோடு, மருதையாற்றில் கழிவுநீர் கலக்காமல் இருப்பதைத் தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.


