
மேற்கு வங்கத்தின் துர்க்காபூரில் மருத்துவக் கல்லூரி மாணவியைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் மூவரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மேற்கு வங்கத்தின் துர்க்காபூர் தனியார் மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் இரண்டாம் ஆண்டு படித்து வரும் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த மாணவி தன் ஆண் நண்பருடன் இரவு எட்டரை மணிக்குக் கல்லூரியை விட்டு வெளியே வந்துள்ளார்.
அப்போது அங்கு வந்த சிலர் ஆண் நண்பரை மிரட்டி விரட்டி விட்டு அந்தப் பெண்ணை அருகில் உள்ள காட்டுப்பகுதிக்குக் கொண்டு சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இது குறித்துத் தகவல் அறிந்த அந்தப் பெண்ணின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில் குற்றவாளிகள் வந்து மிரட்டியபோது தன் பெண்ணுடன் வந்த ஆண் நண்பன் ஓடிவிட்டதால் அவனுக்கும் இதில் தொடர்பிருக்கலாம் என்று ஐயம் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட மாணவிக்குத் துர்க்காபூர் மருத்துவமனையில் தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தக் கொடுமை குறித்து அதிர்ச்சியடைந்துள்ள ஒடிசா முதலமைச்சர் மோகன் சரண் மாஜி, குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நிகழிடத்தைப் பார்வையிட்ட காவல்துறையினர் இது தொடர்பாக விசாரணை நடத்தி மூன்று பேரைக் கைது செய்துள்ளனர்.



