அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் நாற்காலிகளை தூக்கிச் சென்ற பொதுமக்கள்!

Advertisements

கோவை:

முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் 108-வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

அதேபோலக் கோவை சிங்காநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட பீளமேடு ரொட்டிக்கடை மைதானத்தில் கோவை மாநகர எம்.ஜி.ஆர். இளைஞர் அணி சார்பில் நேற்று பொதுக்கூட்டம் நடந்தது.

கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் அம்மன் அர்ச்சுனன், கே.ஆர். ஜெயராம், சினிமா டைரக்டர்கள் ஆர்.வி. உதயகுமார், அனுமோகன், மாநில மாணவர் அணி செயலாளர் சிங்கை ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் ஏழை பெண்களுக்கு இலவச தையல் எந்திரங்கள், சலவை பெட்டிகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் நலத்திட்ட உதவிகளாக வழங்கப்பட்டன.

பொதுக்கூட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அவர்கள் அமருவதற்காகப் புத்தம் புது நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. அவற்றில் அமர்ந்தபடியே பொதுமக்கள் பொது க்கூட்டத்தை பார்த்துக் கொண்டிருந்தனர்.

கூட்ட முடிவில் அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. சிங்காநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ.வான கே.ஆர். ஜெயராம் திடீரென எழுந்து பேசத் தொடங்கினார்.

அவர் பேசுகையில் பொதுமக்கள் அவரவர் அமர்ந்திருக்கும் நாற்காலிகளை அவர்கள் வீட்டுக்கே எடுத்துச் செல்லலாம், இதனைத் தான் அன்பளிப்பாக வழங்குவதாகத் தெரிவித்தார்.

இதனால் மகிழ்ச்சி அடைந்த ஆண்களும், பெண்களும் தாங்கள் அமர்ந்திருந்த இருக்கைகளை அப்படியே தூக்கிக் கொண்டு வீட்டுக்கு நடையை கட்டினர். சிலர் 2, 3 நாற்காலிகளைத் தலையில் சுமந்தபடி அங்கிருந்து மகிழ்ச்சியுடன் புறப்பட்டுச் சென்றனர்.

நூற்றுக்கணக்கானோர் ஒரே நேரத்தில் நாற்காலிகளுடன் அங்கிருந்து புறப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. அதேசமயம் பொதுக்கூட்டம் மகிழ்ச்சியுடன் தொடங்கி மகிழ்ச்சியுடன் நிறைவு பெற்றது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *