
நேற்றைய பாராளுமன்ற கூட்டத்தொடரின்போது அமித்ஷா, ‘அம்பேத்கர்… அம்பேத்கர்… அம்பேத்கர்’ என முழக்கமிடுவது இப்போது FASHION ஆகிவிட்டது.
இதற்குப் பதிலாகக் கடவுளின் பெயரை இவ்வளவு முறை உச்சரித்திருந்தால், சொர்க்கத்திலாவது அவர்களுக்கு இடம் கிடைத்திருக்கும் என்று பேசினார்.
இந்தக் கருத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் தற்போது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பாராளுமன்ற வளாகத்தில் அம்பேத்கர் புகைப்படங்களை ஏந்தி அமித்ஷாவுக்கு எதிராகப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். ராகுல் காந்தி, கார்கே, திமுக எம்.பி. டி.ஆர். பாலு உள்ளிட்டோர் போராட்டத்த்தில் பங்கெடுத்துள்ளனர்.
முன்னதாக அமித்ஷா அம்பேத்கரை அவமதித்ததாக விமர்சித்திருந்த ராகுல் காந்தி, மனுதர்மத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்களுக்கு அம்பேத்கர் பிரச்சனையாகத்தான் தெரிவார் என்று தெரிவித்திருந்தார்.
அம்பேத்கர் மீதான அவரது வெறுப்பையே இப்பேச்சு வெளிப்படுத்துகிறது என்று விமர்சித்துள்ள காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் இதுகுறித்து விவாதிக்க மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டிஸை தாக்கல் செய்துள்ளார்.

