
திருச்செந்தூர்:
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் சிறந்த பரிகார தலமாகவும், ஆன்மீக தலமாகவும் விளங்கி வருகிறது.
தற்போது கோவிலில் ரூ.300 கோடி மதிப்பிலான மெகா திட்ட வளாகப் பணிகள் அறநிலையத்துறை மற்றும் எச்.சி.எல் நிறுவனம் சார்பில் திருப்பணிகள் நடந்து வருகிறது.
இப்பணிகள் விரைவில் நிறைவுபெற்று வருகிற ஜூலை 7-ந் தேதி கும்பாபிஷேகம் நடக்க உள்ளது.
இந்நிலையில் ராஜகோபுரம் திருப்பணிகள் வேலைகள் நடைபெற்று வருகிறது. ராஜகோபுர கலசங்கள் புதுப்பிக்கப்பட்டு பொருத்தி முடிக்கப்பட்டுள்ளது.
இதில் ராஜகோபுரத்தின் ஒன்பதாவது நிலையில் கட்டபொம்மன் காலத்தில் ஒலித்த ராட்சத மணி உள்ளது.
அந்தக் காலத்தில் மூலவருக்கு உச்சிகால தீபாராதனை முடிந்ததும் சண்முக விலாச மண்டப முகப்பில் உள்ள மணி அடிக்கப்பட்டதும், ராஜகோபுரத்தில் உள்ள மணி அடிக்கப்படும்.
அதன் தொடர்ச்சியாகப் பாஞ்சாலங்குறிச்சி வரை கட்டபொம்மன் அமைத்த மணி மண்டபங்களில் உள்ள மணிகள் ஒன்றன் பின் ஒன்றாக ஒலிக்கும்.
இந்த மணிகள் வரிசையாக ஒலித்தபின் பாஞ்சாலங்குறிச்சியில் வீர ஜக்கதேவியை வணங்கி விட்டு வீரபாண்டிய கட்டபொம்மன் மதிய உணவு சாப்பிடுவது வழக்கம்.
இந்த மணி கடைசியாக 2009-ம் ஆண்டு கும்பாபிஷேகத்தின்போது ஒலித்தது. அப்போது சிறிது காலம் மட்டும் ஒலித்தது. பிறகு காலப்போக்கில் மணி ஒலிப்பது நிறுத்தப்பட்டது.
தற்போது ராஜகோபுரம் திருப்பணிகளோடு ஒன்பதாவது நிலையில் உள்ள ராட்சத மணியும் புதுப்பிக்கப்பட்டு உள்ளது. இந்தக் கும்பாபிஷேக தினத்தன்று கட்டபொம்மன் காலத்தில் ராஜகோபரமணி ஒலிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
