
திருப்பட்டினம் பட்டினச்சேரி மீனவர்கள் மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
காரைக்கால் மாவட்டம் திருப்பட்டினம் பகுதிக்கு உட்பட்ட பட்டினச்சேரி மீனவ கிராமத்தில் 3000க்கும் மேற்பட்ட மீனவர்கள் 200 க்கும் மேற்பட்ட பைபர் படைகளையும் 30-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளையும் கொண்டு மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் அப்பகுதியில் மீன் பிடி தொழில் செய்வதற்கு ஏதுவாகத் திருமலைராஜன் ஆற்றின் முகத் துவாரத்தின் இருபுறமும் கற்களைக் கொட்டி சிறிய வகை மீன்பிடித் துறைமுகம் அமைத்துத் தர வேண்டும், சுனாமியின்போது தொண்டு நிறுவனத்தின் மூலம் கட்டி முடிக்கப்பட்டு பல வருடங்களாகப் பயன்படுத்தப்படாமல் இருக்கும் ஐஸ் பிளண்டை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்,
3000 திற்கும் மேற்பட்டோர் வசிக்கும் இக்கிராமத்தில் தண்ணீர் பற்றாக்குறை நீடிப்பதால் இதனைப் போக்க மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைத்துத் தர வேண்டும் என மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தித் திருப்பட்டினம் பட்டினச்சேரி மீனவர்கள் கடந்த 25 ஆம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் நடத்தி வந்த பட்டினச்சேரி மீனவர்கள், இதன் ஒரு பகுதியாக இன்று பட்டினச்சேரி மீனவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உண்ணாவிரத போராட்டத்தினை தமிழ் மீனவர் விடுதலை வேங்கைகள் இயக்கத்தில் நிறுவன தலைவர் மங்கையர் செல்வன் துவக்கி வைத்தார்.
உண்ணாவிரத போராட்டத்தில் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 11 மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவ பிரதிநிதிகள் மற்றும் பெண்கள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்றால் மாவட்டத்தில் உள்ள 11 மீனவ கிராம மக்களை ஒன்று திரட்டிச் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் பட்டினச் மீனவர்கள் புதுச்சேரி அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

