Money Laundering Case: மனைவியை முதல்வராக்க திட்டம்!

Advertisements

புதுடில்லி: ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமறைவாக உள்ள நிலையில், அவரது டில்லி வீட்டில் ரூ.36 லட்சம் ரொக்கம், 2 சொகுசு கார்கள் மற்றும் பணமோசடி தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதனால் ஜார்க்கண்டில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

ஜார்க்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரன் (48) உள்ளார். இவர் மீது, நிலமோசடி விவகாரத்தில் நடந்த சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக அமலாக்கத்துறை அனுப்பிய 7 சம்மன்களை ஹேமந்த் சோரன் புறக்கணித்து இருந்தார்.

இந்நிலையில், நேற்று ஹேமந்த் சோரனிடம் விசாரிக்க டில்லியின் மோதிலால் தெருவில் உள்ள அவரது தந்தை வீட்டிற்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்றனர். அங்கு அவர் இல்லாததால், முதல்வர் இல்லத்திற்கும் சென்றனர். அங்கும் அவர் இல்லை. இதனால் அவர் தலைமறைவானது தெரியவந்தது.

நேற்று முதல் தற்போது வரை ஹேமந்த் சோரன் எங்கு உள்ளார் என்ற தகவல் ஏதும் தெரியவில்லை. முதல்வருடன் பாதுகாப்பு பணிக்கு சென்றிருந்த இரண்டு பாதுகாவலர்களில் ஒருவர் ராஞ்சிக்கு திரும்பி விட்டதாகவும் மற்றொரு அதிகாரியும் தலைமறைவாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

டில்லியில் உள்ள முதல்வர் வீட்டில் அதிகாரிகள் சோதனை செய்ததில் ரூ.36 லட்சம் ரொக்கம், 2 பிஎம்டபிள்யூ சொகுசு கார்கள் மற்றும் சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான ஆவணங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறை அதிகாரிகள் வலைவீசி தேடிவருகின்றனர். விமான நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளதுடன், அண்டை மாநிலங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கார் மூலம் ராஞ்சிக்கு ஹேமந்த் சோரன் சென்று வருவதாகவும் கூறப்படுகிறது.

முதல்வர் தலைமறைவாக உள்ளதால், ஜார்க்கண்ட் மாநிலம் முழுவதும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. சோரன் வீட்டிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

பா.ஜ., எம்.பி., நிஷிகாந்த் துபே கூறுகையில், ‛‛ஹேமந்த் சோரன் விசாரணை அமைப்புகளை எதிர்கொள்ளாமல் தப்பியோடுகிறார். அவர் உள்நாடு மற்றும் வெளிநாடுகளிலும் அவமானங்களை சந்தித்து வருகிறார். அவரால் எப்படி மக்களை பாதுகாக்க முடியும். தனது கட்சி மற்றும் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.,க்களை ராஞ்சிக்கு வருமாறு அழைத்துள்ளார். எனக்கு கிடைத்த தகவல்படி, மனைவி கல்பனாவை முதல்வராக்க ஹேமந்த் சோரன் திட்டமிட்டுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *