
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை மக்களவை ஏற்றுக்கொண்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை ஐந்து மணிக்கு மாநிலங்களவையில் உரையாற்ற உள்ளார்.
நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடரின் முதல் நாளில் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் அரசின் கொள்கைகள், செயல்பாடுகளை விளக்கிக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றினார்.
இந்த உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மக்களவையில் இரண்டு நாட்கள் உறுப்பினர்களின் விவாதம் நடைபெறும் என்றும் இறுதியில் அதற்குப் பிரதமர் பதிலளிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டது.
இரண்டு நாட்களும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி, சீன விவகாரம் குறித்து இராணுவத் தளபதி நரவானே எழுதிய கருத்துக் குறித்துப் பேச முற்பட்டார். அதற்கு அவைத் தலைவர் பேச அனுமதிக்கவில்லை. இதைக் கண்டித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து அவை நடுவுக்குச் சென்று தாள்களைக் கிழித்தெறிந்த மாணிக்கம் தாகூர், வெங்கடேசன் உள்ளிட்ட 8 பேரைக் கூட்டத்தொடர் முழுமைக்கும் இடை நீக்கம் செய்துள்ளனர்.
இந்நிலையில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை மக்களவை ஏற்றுக்கொண்டதாக அறிவித்துள்ளது. அதேபோல் பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 5 மணிக்கு மாநிலங்களவையில் உரையாற்ற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




