
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பாதிரிவேடு பகுதியைச் சேர்ந்த 29 வயதாகும் நாகார்ஜுனா என்பவர் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் ஊழியராக வேலை செய்து வருகிறார். கடந்த 45 நாட்களுக்கு முன்னர், நாகார்ஜுனாவுக்கும், சென்னை திருவேற்காடு, அயப்பாக்கம் சூரிய நாராயண நகரை சேர்ந்த விஸ்வ பிரியா (25) என்பவருக்கும் திருமணம் நடந்தது.
17ம் தேதி அன்று மாலை, தனது கணவருடன் சென்னை திருவேற்காட்டில் உள்ள தாய் வீட்டுக்கு விஸ்வ பிரியா சென்றார். இருசக்கர வாகனத்தில் பின்னால் விஸ்வ பிரியா அமர்ந்திருந்தார். நாகார்ஜுனா வாகனத்தை ஓட்டிச் சென்றுகொண்டிருந்தார். இவர்களின் இரு சக்கர வாகனம் கவரைப்பேட்டை-சத்யவேடு சாலையில் குருவராஜா கண்டிகை சாலை சந்திப்பு அருகே செல்லும்போது, எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் பயங்கரமாக மோதியது. இதில் நாகர்ஜூனா லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.
ஆனால் இந்த விபத்து காரணமாக மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து சென்ற புதுபெண் விஸ்வ பிரியா தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காகக் கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காகப் பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இதுகுறித்து கவரைப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


