
நீண்ட காலம் எதிர்க்கட்சியாக இருக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் உறுதியை பாராட்டுவதாகப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த ஜனவரி மாதம் 31ஆம் தேதி கூடிய கூட்டத்தொடர், வருகிற 9ஆம் தேதி நிறைவடையவுள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இடைக்கால பட்ஜெட்டை கடந்த 1ஆம் தேதி தாக்கல் செய்தார்.
நடப்பாண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், குடியரசுத் தலைவர் உரையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. இரு அவைகளின் கூட்டு அமர்வில் கடந்த 31ஆம் தேதி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றினார்.
அதன் மீது இரு அவைகளிலும் விவாதம் நடந்த நிலையில், குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பதிலளித்து பிரதமர் மோடி இன்று மக்களவையில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், இந்த 75வது குடியரசுத் தினம், புதிய நாடாளுமன்றம், செங்கோல் – இவை அனைத்தும் மிகவும் சுவாரசியமாக இருந்தது. இதை எப்போதும் நினைவில் வைத்திருப்போம் என்றார்.
“புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் குடியரசுத் தலைவர் நம்மிடம் உரையாற்ற வந்தபோது, முழு ஊர்வலத்தையும் செங்கோல் வழிநடத்தியது. நாங்கள் அதன் பின்னால் நடந்து கொண்டிருந்தோம். இந்தியா சுதந்திரம் பெற்ற அந்தப் புனிதத் தருணத்தை இந்தப் புதிய பாரம்பரியத்தில் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் பிரதிபலிக்கும்போது, ஜனநாயகத்தின் மாண்பு உயரும்.” என்று பிரதமர் மோடி கூறினார்.
நீண்ட காலம் எதிர்க்கட்சியாக இருக்க வேண்டும் என்ற உறுதியை பாராட்டுவதாக எதிர்க்கட்சிகளைப் பிரதமர் மோடி கிண்டல் அடித்தார். “நீண்ட காலம் எதிர்க்கட்சியாக இருக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் உறுதியை பாராட்டுகிறேன். பல பத்தாண்டுகளாக நீங்கள் எப்படி அரசாங்கத்தில் அமர்ந்திருந்தீர்களோ, அதே போன்று எதிர்க்கட்சி வரிசையில் தீர்மானித்துள்ளீர்கள் அதற்குப் பொதுமக்கள் உங்களுக்கு ஆசீர்வாதங்களை வழங்குவார்கள்.” எனப் பிரதமர் மோடி கூறினார்.
எதிர்வரவுள்ள மக்களவை தேர்தலில் எதிர்க்கட்சிகள் தோல்வியடையும் என்பதை வலியுறுத்திப் பேசிய பிரதமர் மோடி, உங்களில் பலர் (எதிர்க்கட்சி) தேர்தலில் போட்டியிடும் தைரியத்தை கூட இழந்துவிட்டதை நான் காண்கிறேன். கடந்த முறையும் சில இருக்கைகள் மாற்றப்பட்டன, இந்த முறையும் பலர் இருக்கைகளை மாற்ற முயல்வதாகக் கேள்விப்பட்டேன். லோக்சபாவுக்குப் பதிலாக ராஜ்யசபாவுக்கு இப்போது பலர் செல்ல விரும்புவதாகவும் கேள்விப்படுகிறேன் என்றார்.
எதிர்க்கட்சி என்ற பொறுப்பை அவர்கள் (எதிர்க்கட்சி) நிறைவேற்றத் தவறிவிட்டார்கள்; நாட்டிற்கு நல்ல எதிர்க்கட்சி தேவை என்று நான் எப்போதும் கூறி வருகிறேன் எனவும் பிரதமர் மோடி எதிர்க்கட்சிகளைக் கடுமையாகத் தாக்கிப் பேசினார்.
குடியரசுத் தலைவர் உரையில் சிறுபான்மையினருக்கு எதுவும் இல்லை என்ற எதிர்க்கட்சி எம்பி ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த பிரதமர் நரேந்திர மோடி, “மீனவர்கள் உங்களுக்குச் சிறுபான்மையினராக இல்லாமல் இருக்கலாம், கால்நடைகளை மேய்ப்பவர்கள் உங்களுக்குச் சிறுபான்மையினராக இல்லாமல் இருக்கலாம், விவசாயிகள் சிறுபான்மையினராக இல்லாமல் இருக்கலாம். ஒருவேளை பெண்கள் உங்கள் இடத்தில் சிறுபான்மையினராக இல்லாமல் இருக்கலாம். உனக்கு என்ன ஆகி விட்டது? எத்தனை காலம் பிரிவினைகளை நினைத்துக் கொண்டிருப்பீர்கள்? எத்தனை காலம் சமூகத்தைப் பிளவுபடுத்துவீர்கள்?” எனக் காட்டமாகக் கேள்வி எழுப்பினார்.


