
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதான அதுல் சுபாஷ் என்ற ஐடி ஊழியர் கடந்த திங்களன்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். மரணத்துக்கு முன் செய்யவேண்டியவை என்று அட்டவணை போட்டு அதை ஒவ்வொன்றாக முடித்துவிட்டு கடைசியில் அவர் தற்கொலை செய்துள்ளார்.
24 பக்க தற்கொலைக் குறிப்பை விட்டுவிட்டு, 90 நிமிட வீடியோவைப் பதிவு செய்துவைத்து அவர் தற்கொலை செய்துள்ளார். அந்தப் பதிவில், தன் மீதும் தனது குடும்பத்தினர் மீது தனது மனைவி நிகிதா சிங்கானியா மற்றும் அவரது குடும்பத்தினர் பல்வேறு பொய் வழக்குகளைப் போட்டுள்ளதாகக் குற்றம் சாட்டினார்.
விவாகரத்து பெற்ற மனைவி மற்றும் மகனுக்குப் பராமரிப்பு தொகையாக மாதம் ரூ.2 லட்சம் வழங்க வேண்டும் என்று தன்னை அவர்கள் வற்புறுத்துவதாகத் தெரிவித்தார்.
மேலும் உத்தர பிரதேச ஜான்பூர் நீதிமன்ற நீதிபதி, என்மீதான வழக்குகளைத் தீர்த்து வைக்க ரூ.5 லட்சம் லஞ்சம் கேட்பதாகவும் குற்றம் சாட்டியிருக்கிறார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து பெங்களூரு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அதுல் மீதான வழக்குகளை வாபஸ் பெற ரூ. 3 கோடியும், அவரது மகனைப் பார்க்க வருவதற்கு ரூ. 30 லட்சமும் நிகிதா குடும்பத்தினர் கேட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
முன்னதாகச் சட்டங்கள் அனைத்தும் பெண்களுக்குச் சாதகமாகவே இருப்பதாகத் தனது பதிவில் குற்றம் சாட்டிய அதுல் சுபாஷ்,
நான் எவ்வளவு கடினமாக உழைத்து, என் வேலையில் சிறந்து விளங்குகிறேனோ, அவ்வளவு அதிகமாக நானும் என் குடும்பத்தினரும் துன்புறுத்தப்படுகிறோம், மிரட்டிப் பணம் பறிக்கப்படுகிறோம், மேலும் இதை ஒட்டுமொத்த சட்ட அமைப்பும் ஊக்குவிக்கிறது.
இப்போது, நான் போனதால், பணமும் இருக்காது, என் வயதான பெற்றோரையும், என் சகோதரனையும் துன்புறுத்த எந்தக் காரணமும் இருக்காது என்று உருக்கமாகத் தெரிவித்தார்.
மேலும் மனைவி நிகிதாவும் அவரது தாயார் நிஷாவும் தன்னை தற்கொலைக்குத் தூண்டியதாகவும் அவர் குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.



