கேரள மக்களுக்கு மழை அலர்ட்! 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு; 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

கேரளாவில் 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. 3 மாவட்டங்களுக்கு கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. டெல்லியில் இதுவரை இல்லாத அளவுக்கு மழை வெளுத்து வாங்கியது. அங்குள்ள யமுனா ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு உள்ளனர். மேலும் உத்தரகாண்ட், இமாச்சலப் பிரதேசம், மகாராஷ்டிரா, தெலங்கானா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களிலும் கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கேரளாவின் கண்ணூர், கோழிக்கோடு, வயநாடு, காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாகவும் ஆலப்புழா, கோட்டையம், எர்ணாகுளம், இடுக்கி, பாலக்காடு, திருச்சூர், மலப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் ஆகிய மாவட்டங்களில் இன்று கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதே நேரத்தில் கண்ணூர் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி தேர்வில் எந்த மாற்றமும் இல்லை என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *