பல்லாவரம் கேட்டால் பண்ருட்டி கிடைத்தது – திருமாவளவன் ஆதங்கம்.!

Advertisements
விசிக சிட்டிங் எம்எல்ஏக்கள் எஸ்.எஸ்.பாலாஜி, ஆளூர் ஷாநவாஸ், பனையூர் பாபு ஆகியோருக்கு மீண்டும் சீட் வழங்காதது குறித்து அவர்களை விசிக தலைமை ஒதுக்கிவிட்டதாக கடந்த சில நாட்களாக பல்வேறு தகவல்கள் வெளியாயின. இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து திருமாவளவன் கூறியதாவது: கடந்த முறை சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தவர்களை நான் மிகவும் நேசிக்கிறேன்.
4 சட்டமன்ற உறுப்பினர்களும் சிறப்பாகப் பணியாற்றினர். நன்றாகப் பணியாற்றியவர்களுக்கு ஏன் இந்த முறை சீட் வழங்கவில்லை என்ற கேள்வி எழுவது இயல்புதான். ஆனால் இதில் எந்த உள்நோக்கமும் இல்லை. ஒரு முறை கூட சீட் தரவில்லை என்று எத்தனையோ நபர்கள் உள்ளனர்.
நாகை மீண்டும் கிடைத்திருந்தால் ஆளூர் ஷாநவாஸுக்கே தந்திருப்பேன். நாகையில் போட்டியிட்ட ஷாநவாஸ் விரும்பவில்லை என்று கூறினார்கள். அந்தத் தொகுதி ஜவாஹிருல்லாவுக்கு சென்றுவிட்டது. ஆளூர் ஷாநவாஸ் ராயபுரத்தில் போட்டியிட விருப்பம் தெரிவித்தார். அவருக்காக நான் சீட் கேட்டேன். அதற்குப் பிறகு பல்லாவரம் வேண்டும் என்று கேட்டார். ஆனால் அது தேமுதிகவிற்கு சென்றுவிட்டது. எங்களுக்கு பண்ருட்டி கொடுத்தார்கள்.
அரூர் தொகுதி கேட்டு பலமுறை போராடினோம். ஆனால் அரக்கோணம் தான் திமுக கொடுத்தது. அவசர கதியில் தொகுதிகள் முடிவு செய்யப்பட்டன. மேலும் காலம் குறைவாக இருந்ததால் விரைவில் முடிவு செய்ய முதல்வர் வலியுறுத்தினார். இதனால் இந்த முடிவு எடுக்கப்பட்டது.ஷாநவாஸ் கூடாது, அவரைத் தடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் எடுக்கப்பட்ட முடிவு இல்லை. இதில் எந்த உள்நோக்கமும் இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.
இது குறித்து ஆளூர் ஷாநவாஸ் வெளியிட்ட அறிக்கையில், “ ஒரு கட்சியில் யாருக்கு எப்போது எப்படி வாய்ப்பளிக்க வேண்டும் என்பது அந்தக் கட்சியின் தலைமை எடுக்கும் முடிவாகும். அம்முடிவு எதுவாயினும் அதை ஏற்றுக் கொள்வதே சிறந்த அறமாகும்.” என கூறியுள்ளார்.
மேலும் அவரிடம் பேசும்போது, ‘‘பொது தொகுதியான நாகையில் விசிகவுக்கு நிறைய எதிர்ப்பு இருந்தது, பல நெருக்கடிகளுக்கு பின்பு தான் வெற்றி பெற முடிந்தது. விசிகவின் கூட்டங்களில் நான் பங்கேற்பது இல்லை என வரும் செய்திகள் தவறானவை. மீண்டும் வாய்ப்பு வரும் என நம்பிக்கை இருந்தது, ஆனால் வாய்ப்பு கிடைக்காதது வருத்தமில்லை’’ என்றார். இதேபோல எஸ்.எஸ்.பாலாஜியும் வாய்ப்பு கிடைக்காதது மனக்குறையாகவோ, தனக்கு அநீதி இழைக்கப்பட்டதாக கருதவில்லை என தெரிவித்தார்.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *