Palladam Murder: உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட உடல்கள்!

பல்லடத்தில் படுகொலை செய்யப்பட்ட 4 பேரின் உடல்கள் உறவினர்களிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது…

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகேயுள்ள கள்ளக்கிணறு கிராமத்தைச் சேர்ந்த தவிடு புண்ணாக்கு வியாபாரம் செய்து வந்த 47 வயதான செந்தில் குமாரின் வீட்டின் முன்பு நேற்று முன் தினம் இரவு 3 பேர் கொண்ட கும்பல் மது அருந்திக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

இதனைச் செந்தில் குமார் தட்டிக் கேட்ட நிலையில், அதன் காரணமாக ஆத்திரமடைந்த அக்கும்பல் செந்தில் குமாரை முதலில் அரிவாளால் வெட்டிக் கொலை செய்துள்ளது. இந்தக் கொடூர சம்பவத்தின்போது, தடுக்க சென்ற செந்தில் குமாரின் தம்பி மோகன்ராஜா, அவருடைய தாய் புஷ்பவதி, சித்தி ரத்தினாம்பாள் ஆகியோரையும் அந்தக் கும்பல் சரமாரியாக வெட்டியுள்ளனர்.

இந்தச் சம்பவத்தின் விசாரணையில் ஆறு மாதத்திற்கு முன்பு பணம் பிரச்சினை தொடர்பாகச் செந்தில்குமாருக்கும், 34 வயதான வெங்கடேஷ் என்பவருக்கும் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து, இந்தக் கொலை வழக்கில் தொடர்புடைய செல்லமுத்து என்பவர் கைது செய்யப்பட்டுள்ளாரெனத் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாமிநாதன் தகவல் தெரிவித்துள்ளார். இந்தநிலையில், உடல்களை வாங்க மறுத்து, உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

பேச்சுவார்த்தைக்குப் பின் தற்போது உடல்கள் ஒப்படைக்கப்பட்டது. குற்றவாளிகளைக் கைது செய்வதாகக் காவல்துறை உறுதியளித்ததை தொடர்ந்து உடல்களை வாங்க உறவினர்கள் ஒப்புதல் தெரிவித்தனர். பல்லடம் அரசு மருத்துவமனையில் 4 பேரின் உடல்களும் ஆம்புலன்சில் ஏற்றப்பட்டு சொந்த ஊருக்குச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே உடல்களை ஏற்றிய ஆம்புலன்ஸை ஒருசிலர் சிறைப்பிடித்துள்ளதால் பரபரப்பு நிலவி வருகிறது. இறுதி ஊர்வலத்தில் இந்து மக்கள் கட்சியினர் பங்கேற்க வேண்டும் என்பதால் சிறைப்பிடித்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *