
ஹோட்டலில் புகுந்த ஆயுதம் ஏந்திய 5 பேர் குருசுவாமியை சராமாரியாக வெட்டியுள்ளனர். இதில் குருசுவாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், அவரது நண்பர் பலத்த காயங்களுடன் தப்பினார்…
முன்னாள் மத்திய அமைச்சரும், திமுகவின் முன்னாள் முக்கிய தலைவர்களில் ஒருவருமான மு.க.அழகிரியின் உதவியாளராகப் பெங்களூருவில் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில்ஆளும் கட்சியான திமுகவின் முன்னாள் தலைவர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.அழகிரி. திமுக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சராக இருந்த இவர் தற்போது அரசியலிலிருந்து விலகி மதுரையில் பெரும் தொழிலதிபர்களில் ஒருவராக இருந்து வருகிறார். இவரிடம் உதவியாயளராக வி.கே.குருசுவாமி (55) என்பவர் பணியாற்றி வந்துள்ளார்.
ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவர், நேற்று முன்தினம் (செப்டம்பர் 3) மதுரையிலிருந்து விமானம்மூலம் பெங்களூருக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். அங்கு ஒரு தனியார் ஹோட்டலில் தங்கியிருந்த அவர், பெங்களூருவின் பானஸ்வாடி பகுதியில் குடியிருப்பு ஒன்றை தேடுவதற்காக ஒரு தரகருடன் பேசியுள்ளார். பனஸ்வாடி அருகே உள்ள சுக் சாகர் ஹோட்டலில் தனது நண்பரான ரியல் எஸ்டேட் புரோக்கருடன் ஹோட்டலில் தேநீர் அருந்திக்கொண்டிருந்துள்ளார்.
அப்போது திடீரென ஹோட்டலில் புகுந்த ஆயுதம் ஏந்திய 5 பேர் குருசுவாமியை சராமாரியாக வெட்டியுள்ளனர். இதில் குருசுவாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், அவரது நண்பர் பலத்த காயங்களுடன் தப்பினார். ஆனாலும் அவரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் சம்பவம் தமிழகம் மற்றும் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இந்தத் தாக்குதல் சம்பவம் முன்விரோதம் காரணமாக இருக்கலாமெனச் சந்தேகிக்கும் போலீசார், கொலை சம்பவம்குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, “குருச் சுவாமி மதுரையில் ஒரு பிரபலமான நபராக இருந்துள்ளார். “ரவுடி ஷீட்டர்” என்ற பெயருடன், முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக ‘அட்டாக் பாண்டி’ என்ற எம்ராஜபாண்டியனுடன் இவருக்குப் பகை இருந்துள்ளது. அதே சமயம் குருசுவாமி மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


