பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் படைகளுக்கு இடையே எல்லைப் பகுதிகளில் துப்பாக்கிச் சண்டை நிகழ்ந்ததில் நால்வர் கொல்லப்பட்டனர். மேலும் மூவர் காயமடைந்தனர்.
பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும் 2500 கிலோமீட்டர் நீளத்துக்குப் பொதுவான எல்லையைக் கொண்டிருக்கின்றன. ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் தலைமையில் நிலையான ஆட்சி அமைந்த பிறகு பாகிஸ்தானுடனான எல்லையில் அந்நாட்டுப் படையினருடன் அடிக்கடி மோதல் நிகழ்ந்து வருகிறது.
இந்நிலையில் பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் உள்ள ஆப்கன் நகரான ஸ்பின் போல்டாக்கில் நேற்றிரவு இருநாட்டுப் படையினருக்கும் இடையே சண்டை மூண்டது.
இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் பாதுகாப்புக் கருதி வெளியேறியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் தாக்குதலில் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த நால்வர் கொல்லப்பட்டதாகவும், பாகிஸ்தானில் மூவர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
4 மணி நேரம் நீடித்த இந்த மோதலுக்குக் காரணம் என்று இருநாடுகளும் ஒன்றையொன்று குற்றஞ்சாட்டியுள்ளன. தாலிபான்கள் தான் முதலில் துப்பாக்கியால் சுடத் தொடங்கியதாகவும், தாங்கள் பதிலடி கொடுத்ததாகவும் பாகிஸ்தான் குற்றஞ்சாட்டியுள்ளது.
பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறியுள்ளதாகவும், தாங்கள் பதிலடி கொடுத்ததாகவும் ஆப்கானிஸ்தான் தெரிவித்துள்ளது.



