
ரஜினிகாந்த்தின் 173-ஆவது திரைப்படத்தை தனுஷ் இயக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
உலக நாயகன் கமல்ஹாசன் தனது தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் ரஜினிகாந்த்தின் 173ஆவது திரைப்படம் தயாரிக்க உள்ளார். கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் முதல் படம் என்பதால் பெரிய எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.
இதில் சுந்தர்.சி ரஜினியின் படத்தினை இயக்குவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் அண்மையில் சுந்தர்.சி படத்தை இயக்குவதில் இருந்து விலகி விட்டார். இதற்கிடையில், செய்தியாளர்களை சந்தித்து பேசிய கமல்ஹாசன், ரஜினிக்கு பிடித்த கதையை எடுக்கப்போவதாகத் தெரிவித்தார்.
இந்நிலையில், ரஜினியின் 173 ஆவது படத்தை தனுஷ் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது.
இதை தொடர்ந்து, தனுஷ் இதுவரை பவர் பாண்டி, ராயன், நிலவுக்கு என்மேல் என்னடி கோபம், இட்லி கடை” போன்ற படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


