
மூணாறு: மூணாறு மலைச்சாலையில் தமிழக அரசுப் பேருந்தைப் படையப்பா யானை வழிமறித்து கண்ணாடியை உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் மூணாறு பகுதியில் சுற்றி திரியும் படையப்பா காட்டுயானை, அவ்வப்போது சாலையோர கடைகளை உடைப்பது, வாகனங்களை வழிமறித்து தாக்குவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறது. நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு மூணாறிலிருந்து திருப்பூருக்கு செல்லும் தமிழக அரசுப் பேருந்தை ஒன்பதாம் மைலில் படையப்பா யானை வழிமறித்தது. தொடர்ந்து பக்கவாட்டு கண்ணாடியை உடைத்தது.
மேலும் பேருந்தைப் பின்னோக்கி தள்ள முயன்றது. இதைப்பார்த்து பேருந்தில் இருந்த பயணிகள் கூச்சலிட்டனர். இதையடுத்து யானை மீண்டும் காட்டுப்பகுதிக்குள் சென்று விட்டது.
அதிர்ஷ்டவசமாகப் பேருந்தில் இருந்த பயணிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இதில் ஒரு வேடிக்கையான விஷயம் என்னவென்றால், யானை வழிமறித்த தமிழக அரசு பேருந்தின் முன்புறம் படையப்பா என ஸ்டிக்கரும் ஒட்டப்பட்டுள்ளது. படையப்பா என எழுதப்பட்ட அரசுப் பேருந்தைப் படையப்பா யானை வழிமறிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
