
செல்போன் மூலம் கிராமத்து நபரிடம் பண ஆசையைத் தூண்டி ரூ.1.28 லட்சம் மோசடி-வாலிபரை கைது செய்து சிறையில் அடைத்த போலீசார்.
தென்காசி மாவட்டம், அச்சன்புதூர் பகுதியைச் சேர்ந்த சுல்தான் என்ற நபர் தென்காசி மாவட்ட சைபர் குற்றப்பிரிவு காவல்துறையிடம் புகார் ஒன்றை அளித்தார்.
அந்தப் புகாரில், சுல்தானைக் கடந்த சில மாதங்களுக்கு முன்பு செல்போனில் தொடர்பு கொண்ட ஒரு நபர் தாங்கள் ஒரு நிறுவனம் நடத்தி வருவதாகவும், அந்த நிறுவனத்தில் நீங்கள் செலுத்தும் பணத்திற்கு இரு மடங்குத் தொகையை ஒரு மாதத்திற்குள் திருப்பிக் கொடுப்பதாகவும் கூறி உள்ளார்.
மேலும், நீங்கள் செலுத்தும் பணத்தை வங்கி கணக்கில் செலுத்தினாலே போதும், உங்கள் வங்கி கணக்கிற்கு மறு மாதமே இரட்டிப்புத்தொகை அனுப்பி வைக்கப்படும் எனவும் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
இதனை முழுமையாக நம்பிய சுல்தான் தான் சிறுக சேமித்து வைத்திருந்த ரூ.1.28 லட்சம் பணத்தை செல்போனில் தொடர்பு கொண்ட நபர் கொடுத்த வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்துள்ளார்.
அதனைத்தொடர்ந்து மறு மாதம் முதல் தேதியிலிருந்து இரட்டிப்புத்தொகை தமது வங்கிக் கணக்கில் வருகிறதா? என்று ஆவலுடன் சுல்தான் பார்த்துக் கொண்டிருந்த நிலையில், பல நாட்கள் ஆகியும் தனது வங்கிக் கணக்கில் எந்தவிதமான பணமும் வராத நிலையில் அதிர்ச்சி அடைந்த சுல்தான் தன்னை தொடர்பு கொண்ட நபரின் செல்போன் எண்ணுக்கு மீண்டும் தொடர்பு கொண்டு பேச முயற்சித்துள்ளார்.
ஆனால், அந்த எண்ணோ சுவிட்ச் ஆஃப் ஆகி இருந்த நிலையில் அதிர்ச்சி அடைந்த சுல்தான், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்ததாகவும், அதனைத் தொடர்ந்து தற்போது தன்னை ஏமாற்றியவர் மீது நடவடிக்கை எடுத்துத் தனது பணத்தை மீட்டு தரும்படி புகார் அளிப்பதாகவும் தெரிவித்து இருந்தார்.
அந்தப் புகாரைப் பெற்றுக் கொண்ட சைபர் குற்றப்பிரிவு போலீசார் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், சுல்தானை ஏமாற்றிய நபர் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள பூவந்தி கிராமத்தைச் சேர்ந்த செல்வகுமார் என்பது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து, சிவகங்கை விரைந்து சென்ற தென்காசி சைபர் குற்றப்பிரிவு போலீசார் செல்வகுமாரை கைது செய்து தென்காசி அழைத்து வந்து அவரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும், இது போன்ற ஆசை வார்த்தை கூறி மோசடியில் ஈடுபடும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வரும் நிலையில், பொதுமக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட்டு இது போன்ற மோசடியில் சிக்கி பணத்தை இழக்காமல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனச் சைபர் குற்றப்பிரிவு போலீசார் அறிவுரை வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.


