
வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தத்தை எதிர்த்தும், செல்பேசிகளில் சஞ்சார் சாதி செயலியை நிறுவச் சொல்வதை எதிர்த்தும் நாடாளுமன்றத்துக்கு வெளியே காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் இரண்டாம் நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ச்சுன கார்கே, ஜனநாயகத்தைக் காக்கவும், அநீதிக்கு எதிராகவும் தாங்கள் தொடர்ந்து போராடப்போவதாகத் தெரிவித்தார்.
சஞ்சார் சாதி என்பது உளவு பார்க்கும் செயலி என்று காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் பிரியங்கா குற்றஞ்சாட்டியுள்ளார். இந்த நாட்டுக் குடிமக்களுக்குத் தனியுரிமை உள்ளதாகக் கூறிய அவர், ஒவ்வொருவரும் அவர்களின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் சேதிகளை அனுப்புவதை அரசு உளவு பார்ப்பதா? என்று வினவினார்.
எந்தச் சிக்கலைப் பற்றியும் நாடாளுமன்றத்தில் விவாதிக்க அரசு மறுப்பதாகவும் குற்றஞ்சாட்டினார். செல்பேசிக்கான இணையப் பாதுகாப்புத் தேவை தான் என்றும், அதேநேரத்தில் ஒவ்வொருவரின் தனியுரிமையில் அரசு தலையிடுவதை ஏற்க முடியாது என்றும் பிரியங்கா தெரிவித்தார்.
சஞ்சார் சாதி செயலி குறித்துக் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் வேணுகோபால் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது இது மக்களின் தனியுரிமை மீதான தாக்குதல் என்று தெரிவித்தார்.
பொதுமக்களுக்கு உதவுவதாகக் கூறி அவர்களின் தனியுரிமை மீது தாக்குதல் நடத்த பாஜக முயல்வதாகக் குற்றஞ்சாட்டினார். ஏற்கெனவே பெகாசஸ் செயலி மூலம் அரசியல் தலைவர்கள் உளவு பார்க்கப்பட்டதைச் சுட்டிக்காட்டிய அவர் சஞ்சார் சாதி செயலி மூலம் நாட்டு மக்கள் அனைவரையும் கண்காணிக்க அரசு முயல்வதாகக் குற்றஞ்சாட்டினார்.



