
போர்நிறுத்தத்தின் போது ஹோர்முஸ் நீரிணை ‘திறந்திருக்கும்’ என்று ஈரான் அறிவித்ததால், பன்னாட்டுச் சந்தையில் எண்ணெய் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.
அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானுடன் போர் நிறுத்தம் செய்துகொண்டுள்ளன. இந்நிலையில் இந்தப் போர்நிறுத்தம் நீடிக்கும் வரை வணிகக் கப்பல்களுக்காக ஹோர்முஸ் நீரிணை முழுவதும் திறந்திருக்கும் என்று ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பின் எதிரொலியாகப் பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. வெள்ளியன்று காலையில் ஒரு பீப்பாய் 98 டாலராக இருந்த பிரண்ட் கச்சா எண்ணெய் விலை இந்த அறிவிப்புக்குப் பிறகு 88 டாலராக வீழ்ச்சியடைந்துள்ளது.
அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீதான போரைத் தொடங்கு முன் 70 டாலராக இருந்த பிரண்ட் கச்சா எண்ணெய் விலை போர் உச்சக்கட்டத்தை அடைந்தபோது 119 டாலராகவும் உயர்ந்தது குறிப்பிடத் தக்கது. ஹோர்முஸ் நீரிணை திறந்திருக்கும் என்ற ஈரானின் அறிவிப்பை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும் வரவேற்றுள்ளார்.


