எடப்பாடி பக்கமே போகாத எடப்பாடி.. அசால்ட் பின்னணி.!

Advertisements

தமிழகம் முழுவதும் சூறாவளியாக தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தன்னுடைய சட்டமன்ற தொகுதியான எடப்பாடிக்கு வேட்பு மனு தாக்கல் செய்தபோது சென்றதுதான். அதன்பிறகு அந்த பக்கம் பெரிதாக தலை காட்டவே இல்லை.

எப்போதுமே எடப்பாடிக்கு அவருடைய எடப்பாடி சட்டமன்ற தொகுதி சாதகமானது தான் என்றாலும் இப்போது எடப்பாடி அதிமுக நகர செயலாளர் முருகனிடம் மொத்த பொறுப்பையும் ஒப்படைத்து விட்டு தமிழக முழுவதும் உலா வந்து கொண்டிருக்கிறார் எடப்பாடி. இதற்கு ஒரு தனி காரணம் இருக்கிறது.

தமிழ்நாட்டின் 233 தொகுதிகளில் தமிழக வெற்றி கழகம் வேட்பாளர்களை நிறுத்தி இருக்கிறது. ஆனால் எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் கட்சியின் வேட்பாளராக  அருண் தாக்கல் செய்த வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது. சேலம் மாவட்டத்தில் எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் மட்டும் தமிழக வெற்றி கழகத்திற்கு 30 ஆயிரம் உறுப்பினர்கள் இருப்பதாக அக்கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் தலைமையிடம் எடுத்துரைத்தனர்.

இதனால்,  இங்கே வலிமையான வேட்பாளரை எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக நிறுத்தலாம் என்றும் அவர்கள் யோசனை கூறினார்கள். சமீபத்தில் அதிமுகவிலிருந்து வந்து இங்கு சேர்ந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், ‘எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் எடப்பாடி பழனிசாமியை வீழ்த்துவது என் பொறுப்பு. எனவே,  வேட்பாளர் தேர்வையும் என்னிடம் கொடுங்கள்’ என்று கேட்டு வாங்கினார்.

அதன்படியே ஏற்காடு பகுதியை சேர்ந்த அருண் என்பவர் கோடிக்கணக்கில் செலவு செய்யக் கூடியவர் என்று கூறி அவரை எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் வேட்பாளராக ஆக்கினார் செங்கோட்டையன். ஏற்காடு பகுதியைச் சேர்ந்த அருண் எப்படிப்பட்டவர் என அதிமுக உடனடியாக விசாரிக்க ஆரம்பித்தது. அப்போதுதான்  ஏற்காட்டைச் சேர்ந்த அதிமுக முன்னாள் அரசு வழக்கறிஞர் தனசேகருக்கு நன்கு பழக்கமானவர் என்பதை கண்டுபிடித்துள்ளனர்.

உடனடியாக அதிமுகவை சேர்ந்த முன்னாள் அரசு வழக்கறிஞர் தனசேகர், தமிழக வெற்றி கழக வேட்பாளர் அருணோடு பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில் தனசேகர் சொல்வதையெல்லாம் செய்வதாக ஒப்புக்கொள்கிறார் தமிழக வெற்றி கழக வேட்பாளர் அருண். அங்கீகரிக்கப்படாத கட்சியின்  வேட்பாளர்  மனுவை பத்து பேர் முன்மொழிய வேண்டும் . அது தெரிந்திருந்தாலும் அருண் தனது வேட்பு மனுவை எட்டு பேர் மட்டுமே முன் மொழிய வைத்துள்ளார்.

அதாவது தன்னுடைய வேட்பு மனு தள்ளுபடி ஆகவேண்டும் என்பதற்காகவே அவர் திட்டமிட்டு மனு தாக்கல் செய்திருக்கிறார். எடப்பாடிக்கு எதிராக நான் வேட்பாளரை நிறுத்துகிறேன் என்று விஜயிடம் சொன்ன செங்கோட்டையனுக்கு கூட  தெரியாமல் இந்த ஆபரேஷனை நடத்தி முடித்து இருக்கிறது அதிமுக.  இதன்படியே எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றி கழக வேட்பாளர் அருண், அவரது மாற்று வேட்பாளர் ஆகிய இரண்டும் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டன.

இதற்கிடையே, எடப்பாடியை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என இன்னொரு பக்கம் சசிகலா காய் நகரத்தினார். இதற்காக அவர் டாக்டர் ராமதாஸிடம், ‘எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் 50% மேல வன்னியர்கள் இருக்காங்க. அதனால், நீங்கள் உங்கள் வேட்பாளரை அங்கே போடுங்கள். அதன் மூலம் எடப்பாடிக்கு நாம் நெருக்கடி கொடுக்கலாம்’ என்று கூறியிருக்கிறார் சசிகலா.

அதாவது எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் எடப்பாடி பழனிசாமி கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்,  திமுக வேட்பாளர் காசியும் கவுண்டர் சமுதாயத்தை சேர்ந்தவர். நாம் தமிழர் வேட்பாளரும் கவுண்டர் சமுதாயத்தை சேர்ந்தவர். இந்த நிலையில் நான் வன்னியர் சமுதாய வேட்பாளரை நிறுத்தினால் எடப்பாடி திணற வைக்க முடியும் என்பது சசிகலாவின் கணக்கு. ஆனால், எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வேட்பாளரை நிறுத்துவதில் பாமாவின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் விரும்பவில்லை. இதனால், வன்னியல் தரப்பு வேட்பாளர் எடப்பாடியில் நிறுத்தப்படவில்லை.

எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் தன்னை எதிர்த்து நிற்கும் திமுக வேட்பாளர் பற்றி கூட எடப்பாடி பழனிசாமி கவலைப்படவில்லை. அவர் கவலைப்பட்டது தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் வேட்பாளர்கள் யாரும் நிற்கக்கூடாது, அதேபோல டாக்டர் ராமதாஸ் தரப்பில் வன்னியர் சமுதாயத்தை சேர்ந்த வேட்பாளர்கள் யாரும் நிற்கக் கூடாது என்பதுதான். அவர் நினைத்தபடியே இந்த இரண்டு தரப்பில் இருந்தும் இப்போது வேட்பாளர்கள் இல்லை.

எடப்பாடியும் நிம்மதியாக தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்…

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *