செல்போன் விளையாட்டுக்கு விடை கொடுத்து உடற்பயிற்சி சார்ந்த விளையாட்டுக்கு வாருங்கள் என்று பேரூராட்சித் தலைவர் செல்வராணி இளைஞர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகில் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில் நகர்புற உள்ளாட்சி இளைஞர்களுக்கு உபகரணங்கள் வழங்கும் விழா கவுன்சிலர் லோகேஸ்வரி தலைமையில் நடைபெற்றது. விழாவில், பேரூராட்சி தலைவர் செல்வராணி பங்கேற்று இளைஞர்களுக்கு இறகுபந்து மட்டை, கால்பந்து, சிலம்பக் குச்சி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்.
தொடர்ந்து, விழாவில் பேசிய அவர், இன்றைய சூழலில் இளைஞர்கள் செல்போன் விளையாட்டுகளில் அதிக நேரம் செலவழிப்பதால் பல்வேறு உடல் நலப் பிரச்சினைகள் அதிகரித்து வருவதாகத் தெரிவித்தார். இதனால், வீட்டில் முடங்கி இருக்காமல் வெளியில் வந்து உடற்பயிற்சி சார்ந்த விளையாட்டுகளில் ஈடுபட்டு உடல், மனநலத்தை பாதுகாத்து திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதில், பேரூராட்சி அலுவலர்கள், பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் என பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

